அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி

விழுப்புரத்தில் விளையாட்டுத் துறை சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டி

விழுப்புரத்தில் விளையாட்டுத் துறை சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் விளையாட்டரங்கில் மாவட்ட அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 13 வயதுக்கு உள்பட்டோருக்கு ஒரு பிரிவாகவும் (பெண்கள் 13கி.மீ, ஆண்கள் 15 கி.மீ தொலைவு இயக்க வேண்டும். 15 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் (பெண்கள் 15 கி.மீ, ஆண்கள் 20 கி.மீ தொலைவு இயக்க வேண்டும்). 17 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும்
(பெண்கள் 15 கி.மீ, ஆண்கள் 20 கி.மீ தொலைவு இயக்க வேண்டும், என இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.
300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
அனைத்து பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 13 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியாக முதல் பரிசாக தலா ரூ.100ம், இரண்டாவது பரிசாக தலா ரூ.75-ம், மூன்றாம் பரிசாக தலா ரூ.50-ம் வழங்கப்பட்டது.
இதேபோல, 15 வயதுக்கு உள்பட்ட இருபாலருக்கும் முதல் பரிசாக தலா ரூ.125-ம், இரண்டாவது பரிசாக ரூ.100-ம், மூன்றாம் பரிசாக ரூ.75-ம், 17வயதுக்கு உள்பட்ட மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.150-ம், இரண்டாவது பரிசாக ரூ.125-ம், மூன்றாவது பரிசாக ரூ.100-ம் வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
போட்டிகளில் பங்கேற்று, முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தகுதிச் சான்று வழங்கப்பட்டது.
பரிசுத் தொகையை உயர்த்த கோரிக்கை..
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு அவரது நினைவாக ஆண்டு தோறும் சைக்கிள் போட்டிகள் விளையாட்டுத் துறை சார்பில், மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர். இவர்களுக்கு தொடக்க காலத்திலிருந்தே மிகவும் குறைந்த தொகையே பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகையானது குறைந்த பட்சம் ரூ.50 முதல் அதிக பட்சம் ரூ.150 மட்டுமே வழங்கப்படுகிறது.ஆண்டு தோறும் பல்வேறு மாற்றங்கள், விலைவாசி உயர்வு இருந்தபோதும், மாற்றமில்லாமல் ஆரம்ப காலத்திலிருந்தே இதே பரிசுத் தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. பரிசுத் தொகை ஊக்கப்படுத்த மட்டுமே என்றாலும், அந்த தொகையும் கௌரவமானதாக இருக்க வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றனர் மாணவர்கள்.
இது குறித்து, விளையாட்டுத் துறையினரிடம் கேட்டபோது, அண்ணா பிறந்த நாளில், மாணவர்களை ஊக்கப்படுத்த இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக ரூ.3,125 செலவினத்தொகை ஒதுக்குகின்றனர். இருபாலருக்கும் 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தி, தலா ரூ.50 முதல் ரூ.150 வரை மூன்று ரொக்கப் பரிசு வழங்குகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் இதே நடைமுறைதான் உள்ளது. விளையாட்டுத் துறை கூடுதல் நிதி ஒதுக்கினால், பரிசுத் தொகையும் உயர்த்தி வழங்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com