Enable Javscript for better performance
அதிமுக அரசுக்கு எதிராகப் போராட்டங்களை தூண்டியவர் ஸ்டாலின்: முதல்வர் கே.பழனிசாமி குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக அரசுக்கு எதிராகப் போராட்டங்களை தூண்டியவர் ஸ்டாலின்: முதல்வர் கே.பழனிசாமி குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 11th April 2019 09:01 AM  |   அ+அ அ-   |    |  

    அதிமுக அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானப் போராட்டங்களை தூண்டியவர் மு.க.ஸ்டாலின் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
     விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் எஸ்.வடிவேல் ராவணனை ஆதரித்து, உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை இரவு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்தார்.
     அப்போது, அவர் பேசியதாவது: மத்தியில் நிலையான, பாதுகாப்பான அரசு அமைய வேண்டும் என்பதற்காக, வலிமையான கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சியினரோ மாநிலத்துக்கு மாநிலம் கொள்கையில்லாத கூட்டணி அமைத்துள்ளனர். அவர்களால் எவ்வாறு ஆட்சியைப் பிடிக்க முடியும்?
     தனது தந்தை இறப்பு நிகழ்வை முன் வைத்து, தேர்தல் நேரத்தில் அரசியல் செய்கிறார் மு.க.ஸ்டாலின். கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்காக, சென்னை கடற்கரையில் இடம் கேட்டபோது, அரசு வழக்குரைஞரிடம் ஆலோசித்து, அரசு விதிகள்படி இடம் வழங்கினோம். அண்ணா பல்கலை. அருகே 2.5 ஏக்கர் அளவில் ரூ.300 கோடி மதிப்பிலான இடத்தை வழங்க முன்வந்தோம். ஆனால், அவர்கள்தான் ஏற்கவில்லை. ஆனால், இடமே கொடுக்கவில்லை என பொய் பேசுகிறார் ஸ்டாலின்.
     காமராஜர் இறந்தபோது, அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, அவரது உடலை அடக்கம் செய்ய கடற்கரையில் இடம் வழங்கவில்லை.
     அதேபோல, எம்ஜிஆரின் மனைவி ஜானகியம்மாள் இறந்தபோதும், இடம் தர மறுத்தவர்தான் கருணாநிதி.
     மு.க.ஸ்டாலின் தன்னை ஏதோ அகில இந்தியத் தலைவராகக் கருதிக் கொண்டு, அனைத்து கட்சித் தலைவர்களையும் விமர்சித்துப் பேசுகிறார். கருணாநிதி தான் இறக்கும் வரை ஸ்டாலினை திமுகவின் செயல் தலைவராகத்தான் வைத்திருந்தார். அவரே தனது மகனை ஏற்கவில்லை. மக்கள் எப்படி ஏற்பார்கள்?
     தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், அரசுக்கு எதிராக 35 ஆயிரம் போராட்டங்களை தூண்டிவிட்டு, தோல்வியடைந்தவர் மு.க.ஸ்டாலின். அதன் பிறகும், எடப்பாடி பழனிசாமி அரசு கவிழும் என தொடர்ந்து பேசியும், முயற்சித்தும் வருகிறார்.
     மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவர் கூறுகிறார். அவர் சுதந்திரமாக, சாலையோரம் நடைபயிற்சி செய்து மக்களைச் சந்திக்கும் அளவுக்கு தமிழகத்தில் அமைதி நிலவுகிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. உரியவர்கள் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
     திமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மர்ம மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை வெளியே கொண்டு வரப்படும். அதிமுகவுக்கு எதிராக, இப்போது பரிசுப் பெட்டகம் சின்னத்துடன் வந்துள்ள நபர், இந்தத் தேர்தலோடு காணாமல் போவார்.
     உளுந்தூர்பேட்டையில் ரூ.49 கோடியில் புதைசாக்கடைத் திட்டம், குடிசை மாற்று வாரியத்தால் 264 அடுக்குமாடி வீடுகள் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
     புதிய நீதிமன்ற வளாகம், அரசு மகளிர் பள்ளிக் கட்டடம் போன்ற பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். தமிழக மக்களுக்கான அனைத்துத் திட்டங்களைப் பெறுவதற்கும், தமிழகம் வளர்ச்சி பெறுவதற்கும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் முதல்வர் பழனிசாமி.
     பிரசாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், தமிழக முன்னாள் அமைச்சர் ஆனந்தன், எம்பிக்கள் இரா.லட்சுமணன், எம்எல்ஏ இரா.குமரகுரு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
     "தமிழகத்தின் வளர்ச்சியே இலக்கு'
     கள்ளக்குறிச்சி, ஏப்.10: தமிழகத்தின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
     கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்து கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை அவர் பேசியதாவது: தமிழகம் வளர்ச்சியடைய வேண்டும், செழிக்க வேண்டும், சிறக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. மேலும், நாட்டின் வலிமையான பிரதமரான மோடி, மீண்டும் மத்தியில் ஆட்சியில் அமர வேண்டும். இதற்காகவே சக்திவாய்ந்த கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகளோ பிரதமர் வேட்பாளரையே அறிவிக்க இயலாத, கொள்கைகள் இல்லாத கூட்டணியை அமைத்துக் கொண்டு மக்களவைத் தேர்தலைச் சந்திக்கின்றன.
     பொங்கல் பண்டிகையின் போது, ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது. ஏழைகளுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தைத் தொடக்கிவைத்த நிலையில், தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு, அதை மு.க.ஸ்டாலின் தடுத்துவிட்டார். தேர்தலுக்குப் பின்னர் இந்தப் பணம் வழங்கப்படும். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் போது, தமிழகத்துக்குத் தேவையான கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவோம்.
     தமிழக அரசு இதுவரை 3 ஆயிரம் ஏரிகளை தூர்வாரி உள்ளது. தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் ரூ. 2 ஆயிரம் கோடியில் உணவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா கள்ளக்குறிச்சி அருகே உருவாக்கப்பட்டு வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் முதல்வர் கே.பழனிசாமி. கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் இரா.குமரகுரு எம்எல்ஏ, நகரச் செயலாளர் எம்.பாபு, ஒன்றியச் செயலாளர் அ.ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ க.அழகுவேலு பாபு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
     கடலூரில்...: முன்னதாக, கடலூர் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமியை ஆதரித்து, விருத்தாசலத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை மாலை பிரசாரம் செய்தார்.
     
     
     
     
     
     
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp