சுடச்சுட

  

  தேர்தல் நாளன்று கூவாகம் கோயில் விழா நடைபெற்றாலும், முறையாக வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றுவோம் என்று, விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த திருநங்கைகள் தெரிவித்தனர்.
  விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து திருநங்கைகள் ஏராளமானோர் விழுப்புரத்துக்கு வந்துள்ளனர். இதையொட்டி, விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற "மிஸ் கூவாகம்-2019' நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கைகள் கூறியதாவது:
  மதுரை பாரதிகண்ணம்மா(50):  கடந்த 1996-ஆம் ஆண்டு மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டேன். முதுகலை பட்டம் படித்த நான், மதுரையில் ஒரு தேசிய வங்கியின் காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகிறேன். பல வித கேலிக்கு ஆளாக்கப்பட்டு வந்த திருநங்கைகளுக்கு, தற்போது சமுதாயத்தில் மரியாதை உள்ளது. 
  எனினும், திருநங்கைகளுக்கு அளித்த வாக்குறுதிகளை எந்த கட்சியினரும் நிறைவேற்றவில்லை. இதனால், வருகிற திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் நான் போட்டியிடவுள்ளேன் என்றார்.
  ஈரோடு இலக்கியா(27): பெங்களூரில் பணிபுரிகிறேன். "மிஸ் கூவாகம்' போட்டிகளில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. எப்போதும் திருவிழாவுக்கு வந்தால்,  ஒருவாரம் தங்கியிருப்போம்.  இந்த முறை தேர்த்
  திருவிழா முடிந்ததுமே,  மக்களவைத் தேர்தலுக்காக வாக்களிக்கச் சென்றுவிடுவோம் என்றார்.
  கோவை அம்மு (26): பிற கோயில்களுக்கு தயக்கத்துடன் சென்றாலும், எங்கள் குலதெய்வமான கூத்தாண்டவர் கோயிலுக்கு மகிழ்ச்சியுடன் வந்து செல்கிறோம். இவ்விழாவில் பங்கேற்க வரும் திருநங்கைகளின் நலன் கருதி, விழுப்புரத்தில் குறைந்த வாடகையில் தங்கும் வசதி, பேருந்து வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
  விழாவில் பங்கேற்ற பல திருநங்கைகள், தங்களுக்கு கல்வி,  வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம், இந்த மக்களவைத் தேர்தலில் ஆதரவு நிலை குறித்து கேட்டபோது, கண்டிப்பாக தேர்தலில் பங்கேற்று, நம்பிக்கையான வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai