சுடச்சுட

  

  மது கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்: எஸ்.பி. எச்சரிக்கை

  By DIN  |   Published on : 16th April 2019 10:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலையொட்டி, சட்டவிரோத மது விற்பனை, மது கடத்தலில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் எச்சரித்தார்.
  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கள்ளக்குப்பம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத, கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 420 லிட்டர் எரி சாராயத்தை பெரியதச்சூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பரமசிவம், தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் ஜானகிராமன் உள்ளிட்ட போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, விழுப்புரம் மது விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை திங்கள்கிழமை இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்
  குமார் நேரில் சென்று பார்வையிட்டு, சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாரை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார் .  
  பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி மதுப் புட்டிகள் கடத்தலையும், சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மது விற்பனை செய்வதையும் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மட்டும் மது கடத்தல், சாராயம் விற்பனையில் ஈடுபட்டதாக 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 46 பேர் கைது செய்யப்பட்டனர். 1,500-க்கும் மேற்பட்ட மதுப் புட்டிகள், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள், ஆட்டோ, 16 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
   மேலும், தேர்தலையொட்டி வியாழக்கிழமை நள்ளிரவு வரை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் உள்பட அனைத்து மதுக்கடைகளிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி தேர்தல் நேரத்தில் மது கடத்தல், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர். மது கடத்தலை தடுக்க புதுச்சேரி எல்லையில் உள்ள 9 சோதனைச்சாவடிகளில் இரவு நேரத்தில் கூடுதலாக ஒரு சுழற்சி முறையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபடுகின்றனர். மாவட்டம் முழுவதும் 9 தனிப்படைகள் மது விலக்கு சோதனையில் ஈடுபடும்.
     அதேபோல சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க செவ்வாய்க்கிழமை மாலை தேர்தல் பிரசாரம் நிறைவடைந்ததும், விழுப்புரம் மாவட்டத்தில் தங்கியுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற வேண்டும். அதன்பிறகும், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் போலீஸார் சோதனையிடுவர். பணம், மதுப் புட்டிகள் கடத்திச் செல்வதைத் தடுக்க போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபடுவர் என்றார் எஸ்.பி.
  அப்போது, மது விலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகிலன், விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் திருமால், மது விலக்கு உதவி காவல் ஆய்வாளர் சேதுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai