குத்தகைக்கு வாங்கிய வீட்டுமனைகளில் பிரச்னை: பொது மக்கள் புகார்

விழுப்புரத்தில் நீண்டகால குத்தகைக்கு வாங்கிய வீட்டுமனைகளுக்கு வாடகை கேட்பதால் எழுந்த

விழுப்புரத்தில் நீண்டகால குத்தகைக்கு வாங்கிய வீட்டுமனைகளுக்கு வாடகை கேட்பதால் எழுந்த பிரச்னை தொடர்பாக,  பாதிக்கப்பட்ட மக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர்.
விழுப்புரம் முத்தோப்பு திடீர் குப்பத்தைச் சேர்ந்த பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர்,  எஸ்.தில்லை நடராஜன் தலைமையில் திரண்டு வந்து,  விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 
அப்போது அவர்கள் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, முத்தோப்பு திடீர் குப்பத்தில் இருந்த தனியார் அறக்கட்டளை நிலத்தை, அங்கு குடியிருந்த பரத்வாஜ்-சத்தியபாமா தம்பதியர், தங்கள் நிலம் என தெரிவித்து, எங்களுக்கு 99 ஆண்டு கால குத்தகையின் பேரில் மனைகளாக வழங்கினர். 
தலா ரூ.5ஆயிரம் பெற்றுக்கொண்டு, பதிவு செய்யாத பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வழங்கப்பட்ட இந்த மனைகளில், நாங்கள் வீடு கட்டி, மின் இணைப்பு பெற்று வசித்து வருகிறோம்.  
இந்த இடம் சென்னையில் உள்ள பெர்னாண்டோ மனைவி வசந்தி என்பவருக்குச் சொந்தமானது என தற்போது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இந்த மனைகளை வழங்கிய பரத்வாஜ், இங்கு வசித்து வரும் ரயில்வே ஊழியரான மோகனசுந்தரத்துடன் சேர்ந்துகொண்டு, குத்தகைக்கு விட்ட வகையில் ஒவ்வொருவரும் நிலுவை வாடகையாக ரூ.15 ஆயிரம் உடனே வழங்க வேண்டும். 
மேலும், மாதம் ரூ.1,200 வழங்க வேண்டும் என்று திடீரென கேட்கின்றனர். இல்லாவிட்டால், வீட்டு மின் இணைப்புகளை துண்டித்து, காலி செய்ய வேண்டும் என மிரட்டுகின்றனர். இதனால், இந்தப் பிரச்னை தொடர்பாக விசாரித்து பரத்வாஜ், மோகனசுந்தரம் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com