வானூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு: செங்கல் சூளை உரிமையாளர் காயம்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதில் செங்கல் சூளை உரிமையாளர் காயமடைந்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதில் செங்கல் சூளை உரிமையாளர் காயமடைந்தார்.
வானூர் அருகே காசிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் மணிபால்(29). அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இவர், புதுச்சேரியில் செங்கல் விற்ற பணம் ரூ.50 ஆயிரத்தை வசூல் செய்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் காசிப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, வானூர் அருகே மேட்டுப்பாளையம் பூந்துறை சாலையில் சென்றபோது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சாலையில் நின்றிருந்த அடையாளம் தெரியாத 4 பேர், மணிபாலை வழிமறித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த மணிபால், இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தப்பி ஓடி சாலையோரம் இருந்த முள் புதருக்குள் மறைந்து கொண்டார். பின்னர், உறவினர்களுக்கு மணிபால் தகவல் கொடுத்து அவர்களை நிகழ்விடத்துக்கு வரவழைத்தார்.
 இதையடுத்து முள்புதரில் இருந்து வெளியே வந்த மணிபால் அந்த நபர்களை நோக்கிச்  சென்றார். அப்போது, அந்த மர்ம நபர்கள் திடீரென 2 நாட்டு வெடிகுண்டுகளை மணிபால் தரப்பினரை நோக்கி வீசிவிட்டு தப்பிவிட்டனர். இதில், ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், மணிபால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மணிபாலை உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வானூர் போலீஸார் சிதறிக்கிடந்த தடயங்களை சேகரித்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திங்கள்கிழமை நிகழ்விடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்தினார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com