சுடச்சுட

  

  ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு லஞ்ச வழக்கில் 9 ஆண்டுகள் சிறை

  By DIN  |   Published on : 17th April 2019 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாரிசு சான்றிதழ் வழங்க மாற்றுத் திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில், திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலக ஓய்வு பெற்ற உதவியாளருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
  விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள டி.தேவனூரைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் செந்தில் (30), மாற்றுத் திறனாளி. இவர், தனது தந்தை இறந்த பிறகு, வாரிசு சான்றிதழ் கோரி, கடந்த 2011 நவம்பர் மாதம் திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, அங்கு அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த பத்மநாபன் (59), செந்திலிடம் ரூ.500 லஞ்சமாகக் கேட்டார்.
  இதுகுறித்து விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸில் செந்தில் புகார் செய்தார். போலீஸாரின் வழிகாட்டுதலின்பேரில், செந்தில் திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 20.12.2011-இல் பத்மநாபனிடம் ரூ.500 பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸார் பத்மநாபனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.  விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். குற்றஞ்சாட்டப்பட்ட பத்மநாபனுக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து அவர் உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai