தீவிர பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளர்கள்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகளில் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்த வேட்பாளர்களின்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகளில் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்த வேட்பாளர்களின் தீவிரப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை  மாலையுடன் நிறைவடைந்தது.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமார் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் நகரப் பகுதிகளில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் சென்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். மாலை 5.30 மணியளவில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்துடன் தனது பிரசாரத்தை அவர் நிறைவு செய்தனர். 
முன்னதாக, அந்தக் கூட்டத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி பேசுகையில், நிறைவுப் பிரசாரத்துடன் கூட்டணி கட்சியினர் நின்றுவிடாமல், அவரவர் பகுதிகளுக்குச் சென்று வாக்குகளைப் பெறும் வகையில் கவனமாகப் பணியாற்ற வேண்டும் என்றார். 
கூட்டத்தில் திமுக மாவட்ட பொருளாளர் நா.புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வி.சீனிவாசகுமார், விசிக பொதுச் செயலர் சிந்தனைச்செல்வன், முஸ்தாக்தீன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்துகொண்டனர். 
இதே போல, அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் 
எஸ்.வடிவேல் ராவணன் செவ்வாய்க்கிழமை காலை திண்டிவனத்தில் பிரசாரத்தைத் தொடங்கினார்.  தொடர்ந்து, விக்கிரவாண்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பிற்பகல் பாப்பனப்பட்டு கிராமத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார். பாமக துணைப் பொதுச் செயலர் தங்க.ஜோதி,  மாநில துணைத் தலைவர் அன்புமணி, மாவட்டச் செயலர் ஆர்.புகழேந்தி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதே போல, அமமுக வேட்பாளர் என்.கணபதி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அன்பின் பொய்யாமொழி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கலியமூர்த்தி,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டி.பிரகலதா மற்றும் சுயேச்சைகள் கிராமம், நகர்ப்புற பகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பொன்.கௌதமசிகாமணி இறுதிக் கட்ட பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை காலை ஆத்தூர் நகர் பகுதியில் தொடங்கினார்.
 மதியம் கள்ளக்குறிச்சி நகரில் தியாகதுருகம் சாலையில் கூட்டணி கட்சியினருடன் சென்று அவர் வாக்கு சேகரித்தார். இறுதியாக, மந்தைவெளி திடலில் நடைபெற்ற கூட்டத்துடன் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டார். இந்தக் கூட்டத்தில் திமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆ.அங்கையர்க்கண்ணி, முன்னாள் சட்டப் பேரவை துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் தா.உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் மற்றும் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதிமுக  கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சி நகரில் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக மாவட்டச் செயலாளர் இரா.குமரகுரு, விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் கள்ளக்குறிச்சி நகரில் வாக்கு சேகரித்தனர்.
முன்னதாக, அவர்கள் தியாகதுருகம் சாலையில் உள்ள தேமுதிக அலுவலகத்திலிருந்து கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுடன் இரு சக்கர வாகனங்களில் கள்ளக்குறிச்சி நகரில் வலம் வந்து வாக்கு சேகரித்து பிரசாரத்தை நிறைவு செய்தனர்.  பிரசாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. க.அழகுவேலு பாபு, தேமுதிக மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமமுக வேட்பாளர் 
மா.கோமுகிமணியன் இறுதிக் கட்ட பிரசாரத்தை முடியனூர், மடம், பிரிதிவிமங்கலம், வடதொரசலூர், சிறுநாகலூர், வாழவந்தான்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  
தனது பிரசாரத்தை தியாகை கிராமத்தில் நிறைவு செய்தார். அமமுக தியாகதுருகம் ஒன்றியச் செயலாளர் தங்கதுரை மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதேபோல, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஹ.கணேஷ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷே.சர்புதீன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ச.சக்திவேல் மற்றும் சுயேச்சைகளும் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com