தேர்தல் பணிக்கு ஊதியம் வழங்கக் கோரி ஊர்க்காவல் படையினர் திடீர் போராட்டம்

விழுப்புரத்தில் தேர்தல் பணிக்கான முழு ஊதியத்தையும் வழங்கக் கோரி, ஊர்க்காவல் படையினர்

விழுப்புரத்தில் தேர்தல் பணிக்கான முழு ஊதியத்தையும் வழங்கக் கோரி, ஊர்க்காவல் படையினர் செவ்வாய்க்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினருடன் இணைந்து  ஊர்க்காவல் படையினரும் ஈடுபடவுள்ளனர். இதில் முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற காவல் துறையினர், ஊர்க்காவல் படையினருக்கான பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
தேர்தல் பணியில் ஈடுபட 350-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் வந்திருந்தனர். அவர்களுக்கு தேர்தல் பணிக்கான ஊதியம் தற்போது வழங்கப்படாது. முன்பணமாக ரூ.1,000 மட்டும் வழங்கப்படும். தேர்தல் முடிந்து மீதித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஊர்க்காவல் படையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். முழு ஊதியத்தையும் பணி ஆணை வழங்கும்போதே வழங்கினால்தான், தேர்தல் பணிக்கு வர இயலும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் போராட்டம் குறித்து, ஊர்க்காவல் படை மண்டலத் தளபதி ஸ்ரீதரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்து, எடுத்துக் கூறினார். இதையடுத்து, ஜெயக்குமார், அந்த மைதானத்துக்கு பிற்பகல் 3.30 மணி அளவில் நேரில் வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஊர்க்காவல் படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், 20 ஆண்டுகளாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தேர்தல் பணிக்கான முழு ஊதியத்தையும் வழங்கினால் மட்டுமே பணிக்குச் செல்வோம் என்றும் ஊர்க்காவல் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த எஸ்.பி. ஜெயக்குமார், முன்பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு தேர்தல் பணிக்கு வர விருப்பமுள்ளவர்கள் வரலாம். விருப்பமில்லாதவர்கள், கலைந்து செல்லலாம் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, ஊர்க்காவல் படையினர் தங்கள் பணிக்கு வரவிருப்பமில்லை என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, தேர்தல் பிரிவு காவல் ஆய்வாளர் அம்பேத், ஊர்க்காவல் படை மண்டலத் தளபதி ஸ்ரீதரன் ஆகியோர் வலியுறுத்தலின் பேரில் எஸ்.பி. ஜெயக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில், தேர்தல் ஆணையத்தின் நடைமுறை மற்றும் அறிவுறுத்தலின்படி முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற காவல் துறையினருக்கு முன்பணம் மட்டுமே வழங்கப்படுகிறது. 
இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டிய சூழல் உள்ளதால், இதனை புரிந்து கொண்டு பணிக்கு வருமாறு அறிவுறுத்தினார். இதனை ஏற்று, ஊர்காவல் படையினர் தேர்தல் பணிக்கு வர ஒப்புக்கொண்டனர். 
 இந்த போராட்டம் காரணமாக ஊர்க் காவல் படையினருக்கு மாலை 4 மணிக்கு பிறகே, தேர்தல் பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com