வாக்குப் பதிவு: தேர்தல் உதவி அலுவலர்களுக்கு அறிவுரை

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவுக்கு ஆயத்தமாகும் வகையில், தேர்தல் உதவி

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவுக்கு ஆயத்தமாகும் வகையில், தேர்தல் உதவி அலுவலர்களுக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் பல்வேறு வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத்தொகுதி உதவித் தேர்தல் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் அ.அனுசுயாதேவி கள்ளக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், வாக்குச் சாவடிகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய பொருள்கள், வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் பெற்றுக் கொள்ள வேண்டிய பொருள்கள், ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் எவை என்பது குறித்து உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அ.அனுசுயா தேவி எடுத்துரைத்தார். 
மேலும், வாக்குப் பதிவு நாளான வியாழக்கிழமை காலை 4.30 மணி அளவில் அனைத்து வாக்குச் சாவடிகளை வாக்குப் பதிவு அலுவலர்கள்நேரில் சென்று பார்வையிட்டு, தயார்படுத்த வேண்டும்,  காலை 5 மணிக்குள்அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பணியாளர்களின் வருகையை உறுதி செய்து கொள்ள வேண்டும், வாக்குப் பதிவு மின்னணு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்களித்ததை உறுதி செய்யும் விவி பாட் 
இயந்திரம் ஆகியவைகளில் ஏதேனும் பழுதடைந்து விட்டால் அதனை மட்டும் மாற்ற வேண்டும். மொத்த இயந்திரங்களின் தொகுப்பையும் மாற்றக் கூடாது என அவர் அறிவுரை வழங்கினார்.
மேலும், வாக்குப் பதிவு நாளன்று எதிர்நோக்கப்படும் பிரச்னைகள், அதனை கையாளும் வழிமுறைகள் குறித்தும் அ.அனுசுயா தேவி எடுத்துக் கூறினார்.  வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குச் சாவடிகளில் பொருள்களை பெறும்போது கவனிக்க வேண்டியவை குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறினார். தேர்தல் நாளன்று பின்பற்ற வேண்டிய மணி நேரத் திட்டம் குறித்தும் தேர்தல் உதவி அலுவலர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.
கூட்டத்தில், கள்ளக்குறிச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சங்கராபுரம்  தேர்தல் உதவி அலுவலர் இரா.ரெத்தினமாலா, ரிஷிவந்தியம் தேர்தல் உதவி அலுவலர்செ.ரகுபதி, ஆத்தூர் தேர்தல் உதவி அலுவலர் அ.ச.அபுல்காசீம், கெங்கவல்லி உதவி தேர்தல் அலுவலர் கோ.வேடியப்பன், ஏற்காடு தேர்தல் உதவி அலுவலர் சு.சியமளா, கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.ராமநாதன், கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பூ.தயாளன், தனி வட்டாட்சியர் எஸ்.சையத்காதர் உள்ளிட்ட அலுவலர்கள் 
பலரும் பங்கேற்றனர். 
முன்னதாக, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கும் எண்ணும் மையத்தை உதவி தேர்தல் அலுவலர்களுடன் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் அ.அனுசுயாதேவி பார்வையிட்டார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் அ.அனுசுயாதேவி கூறியதாவது:
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், ஆத்தூர், ஏற்காடு கெங்கவல்லி ஆகிய  6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில்1,794 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 805 
வாக்குச் சாவடி மையங்களில், கண்காணிப்புக்கு உள்படுத்தும் பொருட்டு வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் பணிக்காக 8,564 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 90 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப் பதிவுக்காக 4,432 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,208 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்களித்ததை உறுதி செய்யும் 2,219 விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 
இவை புதன்கிழமை அதிகாலை வாக்குச் சாவடி மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படவுள்ளன. தேர்தல் பாதுகாப்புப் பணியில் காவலர்கள், ஊர்க்காவல் படையினர், அதிரடிப்படையினர், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் என 2,534 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 3 பிரிவுகளாக  பல்வேறு குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். செவ்வாய்க்கிழமை காலை வரை ரூ.2 கோடியே 30லட்சத்து1200 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 
அவற்றில், முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், ரூ.1கோடியே 80லட்சத்து81ஆயிரத்து610 பணம் உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com