அரசு மாதிரிப் பள்ளியில் மழலையர் வகுப்பு தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் முறையாக அரசு மாதிரிப் பள்ளியில் ஆங்கில வழி மழலையர் வகுப்பு (எல்.கே.ஜி) மாணவர் சேர்க்கையுடன் புதன்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் முறையாக அரசு மாதிரிப் பள்ளியில் ஆங்கில வழி மழலையர் வகுப்பு (எல்.கே.ஜி) மாணவர் சேர்க்கையுடன் புதன்கிழமை தொடங்கியது.
 தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆங்கில வழி தொடங்குவதற்கு, கடந்தாண்டு கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது. 32 மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளிகளை ஏற்படுத்தி, அதில் 2019-20ஆம் கல்வியாண்டு முதல் வகுப்புகளைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அரசு மாதிரிப் பள்ளிகளாக தொடங்கப்படும் பள்ளிகளில் எல்கேஜி முதல் தொடர்ச்சியாக பிளஸ் 2 வரை வகுப்புகளை செயல்படுத்துவதற்கான அடிப்படை கட்டமைப்புகளுக்காக ரூ.50 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்தப் பள்ளிகளில் பொலிவுறு வகுப்பறைகள், நவீன ஆய்வுக் கூடம், நூலகம், விளையாட்டு மைதானம், ஆங்கில வழி சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
 இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில், மாதிரிப் பள்ளியாக விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை கல்வித் துறை அறிவித்து, இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
 இப்பள்ளியில் நிகழாண்டு முதல் மழலையர் வகுப்புகள் (எல்கேஜி, யுகேஜி) தொடங்கப்படவுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மழலையர் வகுப்புகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விண்ணப்பம் விநியோகத்தைத் தொடக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 முதல் நாளிலேயே 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்றோர்கள் ஆர்வத்துடன் பெற்றனர்.
 இதே வேகத்தில் ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கைப் பணியும் தொடங்கப்பட்டது. இரு மாணவர்களுக்கு சேர்க்கையும் வழங்கப்பட்டது.
 இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி கூறியதாவது: இந்த மாதிரிப் பள்ளியில் நிகழாண்டு எல்கேஜி வகுப்புகளுக்கு 70 இடங்களும், யுகேஜி வகுப்புகளுக்கு 70 இடங்களும், விதிகள்படி சேர்க்கை நடைபெறும். இந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளைப் போல, ஆங்கில வழியில் இலவச கல்வி வழங்கப்படும். 4 வகுப்புகள் தொடங்கப்பட்டு, அதில், தலா 2 தாற்காலிக ஆசிரியைகள் வீதம் 8 பேர் நியமிக்கப்படவுள்ளனர். வகுப்பறைகளும் தயார் செய்து வருகிறோம்.
 கல்வித் துறை விதிகள்படி, பாடத் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டும், ஆசிரியர்கள் நியமித்தும், ஜூன் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கப்படும். சீருடைகள், உபகரணங்கள், புத்தகங்கள் போன்றவை சேவை அமைப்புகளின் உதவிகளுடன் கிடைக்கப்பெற ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
 இந்தத் திட்டத்தின் கீழ் இரு பாலருக்கும் தொடர்ச்சியாக 5-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகள் எடுக்கப்படும். இதன் பிறகு வழக்கம் போல் 6 முதல் பிளஸ் 2 வரை ஏற்கெனவே உள்ள ஆங்கில வழி வகுப்புகளில், தொடர்ச்சியாக சேர்க்கை மேற்கொள்ளப்படும்.
 இந்த மாதிரிப் பள்ளி சிறப்பாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர். இதன் மூலம் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவர்களின் ஆங்கில வழி கல்விக்கு நல்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com