முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
பெண் எஸ்.ஐ. தற்கொலை முயற்சி
By DIN | Published On : 04th August 2019 12:45 AM | Last Updated : 04th August 2019 12:45 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (35). இவர், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளராக உள்ளார். திருமணமான இவர், கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
வழக்கம்போல, வெள்ளிக்கிழமை பணிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய கலைச்செல்வி, வீட்டில் படுத்துத் தூங்கியுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காததால், பெற்றோர் அவரது அறைக் கதவைத் திறந்து பார்த்தபோது, அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக கலைச்செல்வியை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நலம் தேறினார்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் நடத்திய விசாரணையில், கலைச்செல்வி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. குடும்பப் பிரச்னை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.