இந்து மக்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்: இராம.கோபாலன் வலியுறுத்தல்

இழந்த கோயில்களை மீட்பது என்பது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வென்றெடுக்கும் பொருட்டு, இந்து

இழந்த கோயில்களை மீட்பது என்பது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வென்றெடுக்கும் பொருட்டு, இந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று இந்து முன்னணியின் நிறுவனர் தலைவர் இராம.கோபாலன் வலியுறுத்தினார்.
இந்து முன்னணியின் புதுச்சேரி கோட்டம் சார்பில், இந்து விரோத முறியடிப்பு மாநாடு விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.  புதுவை கோட்டத் தலைவர் எஸ்.சிவா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் எஸ்.வி.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.  
மாநாட்டில் இராம.கோபாலன் சிறப்புரையாற்றிப் பேசியதாவது: 
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பிரிந்ததன் காரணமாக, இழந்த நிலப்பரப்புகளை மீட்க வேண்டும், வேற்று மதங்களுக்கு மாறிய இந்து மக்களை மீட்க வேண்டும், இழந்த கோயில்களை மீட்க வேண்டும், பாரத நாட்டை இந்து நாடு என அறிவிக்க வேண்டும் ஆகிய நான்கு கோரிக்கைகளை இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது.
இந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, இந்த கோரிக்கைகளை நினைவில் வைத்து வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் இந்த கோரிக்கைகளை செயல்படுத்துவார்கள். அந்தச் சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் கோயில்கள் வரை உள்ளன. இந்த கோயில்களை பொலிவாக பராமரித்து, விழா எடுக்க வேண்டும் என்றார் இராம.கோபாலன்.
மாநாட்டில், இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலர் சி.பரமேஸ்வரன், இணை அமைப்பாளர் கே.கே.பொன்னையா, புதுவை மாநிலத் தலைவர் வ.சனில்குமார்,  தமிழ் மாநிலச் செயலர் மனோகர்,  நிர்வாகக்குழு உறுப்பினர் க.குற்றாலநாதன்,  எஸ்.கேசவப்பெருமாள் ஆகியோர் பேசினர்.
தீர்மானங்கள்: புதுவையில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், பல இடங்களில் சட்டவிரோதமாக தேவாலயங்கள்,  மதரஸாக்களை அமைப்பதுடன்,  மத மாற்றம் செய்து கலவரத்தை ஏற்படுத்த முயல்வோரை புதுவை அரசு தடுக்க வேண்டும்.  
விழுப்புரம்,  கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் சாதிய மோதல்களைத் தூண்டி பிரிவினையை ஏற்படுத்த முயல்பவர்களின் சதியை முறியடிக்கும் வகையில் இந்து மக்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும், தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாகவும் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தடுத்து தமிழகம் பாலைவனமாகும் என பொய்ப் பிரசாரம் செய்து வரும் தேச விரோத சக்திகளை தடை செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும், விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் வக்ஃபு வாரிய சொத்து என பல ஆண்டு காலமாக ஏமாற்றி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்
பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com