தொடரும் சாலை விபத்துகள்: பொதுமக்கள் மறியல்

மடப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 

மடப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தி.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராசு மகன் மணிகண்டன் (24). அதே பகுதியைச் சேர்ந்த அமாவாசை மகன் அன்பு (25). நண்பர்களான இவர்கள் இருவரும்,  கூலித் தொழிலாளிகள். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியே சென்று,  உணவகத்தில் சாப்பிட்டனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
மடப்பட்டிலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்தபோது, மணக்குப்பம் கூட்டுச்சாலை பகுதியில் எதிரே திருக்கோவிலூரிலிருந்து வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மணிகண்டன் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அன்பு பலத்த காயமடைந்தார்.
 கிராம மக்கள் அன்புவை மீட்டு, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் சாலையில் கற்களை வரிசையாக வைத்து மறியலில் ஈடுபட்டனர். கடலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால்,  மணக்குப்பம் கூட்ரோடு பகுதியில் தொடர்ந்து விபத்துகள், உயிரிழப்புகள் நடைபெறுவதாக புகார் கூறினர். எனவே, விபத்து ஏற்படும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். விபத்து தடுப்பு எச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும், தொடர் விபத்துகளை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 
இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் முரளி,  திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com