பாமகவில் இணைந்தார்: முன்னாள் எம்எல்ஏ தீரன்

முன்னாள் எம்எல்ஏவான பேராசிரியர் தீரன், பாமக நிறுவனர் ச.ராமதாஸ் முன்னிலையில் அந்தக் கட்சியில் மீண்டும் இணைந்தார். 

முன்னாள் எம்எல்ஏவான பேராசிரியர் தீரன், பாமக நிறுவனர் ச.ராமதாஸ் முன்னிலையில் அந்தக் கட்சியில் மீண்டும் இணைந்தார். 
பாமக தொடங்கிய காலத்தில் அதன் தலைவராக இருந்த தீரன், சில ஆண்டுகளில் அந்தக் கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்து செய்தித் தொடர்பாளராக இருந்தார். கடந்த ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர், சிறிது காலம் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில், தீரன் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸை சந்தித்து அந்தக் கட்சியில் மீண்டும் இணைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் ச. ராமதாஸ் கூறியதாவது: தமிழகத்தில் வன்னியர் சங்கம், பாமக தொடங்கிய காலத்தில், என்னோடு இருந்து கடுமையாக உழைத்தவர் தீரன். அவரது பேச்சு, எழுத்துகள், செயல்களால் பாமக வேகமாக வளர்ச்சி பெற்றது. நாங்கள் இருவரும் பாமகவை கட்டிக்காத்து வளர்த்து வந்தபோது, காலம் எங்களைப் பிரித்தது. அதே காலம் தற்போது எங்களை இணைத்துள்ளது. இனி எந்த சக்தியாலும் எங்களை பிரிக்க முடியாது. அவரது செயல்பாடுகளால் பாமக மேலும் வளர்ச்சி பெறும். விரைவில் அவருக்கு உரிய பதவி வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார் ச.ராமதாஸ்.
தொடர்ந்து, பேராசிரியர் தீரன் கூறியதாவது: 21 ஆண்டு கால வனவாசத்துக்குப் பிறகு பாமகவுக்கு மீண்டும் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. பிற கட்சிகள் போல் அல்லாமல்,  மக்களுக்கான போராட்ட இயக்கமாக பாமக இருப்பதால்தான், அதன் நிறுவனர் ராமதாஸ் போராளி என்றே அழைக்கப்படுகிறார். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியை முதல்வராக்குவதற்கு சிறந்த பங்களிப்பை வழங்குவேன் என்றார் அவர்.
அப்போது, பாமக மாநில துணைத் தலைவர் என்.எம்.கருணாநிதி,  மாநில துணைப் பொதுச் செயலர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com