இளைஞர்களிடம் வழிப்பறி: புதுவையைச் சேர்ந்த மூவர் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்னையைச்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்னையைச் சேர்ந்த இளைஞர்களிடம், பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட புதுவையைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சென்னை கடப்பேரி, முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் சிவா(25). தனியார் காய்கறி விற்பனை மைய முகவர். இவர், தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்,  சூர்யா, சதீஷ்குமார், கார்த்திக், சஞ்சய், விக்கி ஆகிய 6 பேருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையிலிருந்து 4 மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்தார்.
திங்கள்கிழமை அதிகாலை, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில், அனிச்சங்குப்பம் பகுதிக்கு வந்தபோது, சாலையோரம் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி ஓய்வெடுத்தனர்.
அப்போது, புதுவை வழித் தடத்திலிருந்து இரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், தங்களை குற்றப்பிரிவு போலீஸ் என கூறிக்கொண்டு, இந்த நேரத்தில் இங்கு நின்றுகொண்டு என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டனர். மது, போதை பாக்குகள் கடத்தி வருகிறீர்களா என மிரட்டலாக விசாரித்தபடி, மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தனர்.  
தொடர்ந்து, மோட்டார் சைக்கிள்களுக்கான ஆவணங்களைக் கேட்ட அவர்கள், சோதனைச் சாவடியில் வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கு ரூ.3 ஆயிரம் கொடுக்குமாறு கேட்டனர். அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என 7 பேரும் கூறவே, அந்த நபர்கள் திடீரென துப்பாக்கியைக் காண்பித்து, சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டியடி, சிவா பாக்கெட்டில் இருந்த ரூ.750 பணம், செல்லிடப் பேசியைப் பறித்தனர்.
அந்த நேரத்தில்,  நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் வாகன சத்தம் கேட்டதும், அந்த நபர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பினர். அப்போதுதான், அவர்கள் போலீஸ் எனக் கூறி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.  இந்த சம்பவம் குறித்து நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் மூலம் கோட்டக்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திங்கள்கிழமை காலை கோட்டக்குப்பம் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ், உதவி ஆய்வாளர்கள் அருள்செல்வன், கதிரவன், கனகராஜ் தலைமையில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கீழ்ப்புத்துப்பட்டில் நடைபெற்ற அய்யனார் கோவில் திருவிழா கூட்டத்தின் வழியாக சந்தேகமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இரு நபர்களை போலீஸார் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த கௌதம் (24), ஜெயப்பிரகாஷ் (25), பிரகாஷ் (24) என்பதும், துப்பாக்கியைக் காண்பித்து வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி, செல்லிடப்பேசி ஆகியவற்றை ஜெயப்பிரகாஷின் இரு சக்கர வாகனச் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்ததையும் கண்டறிந்து, போலீஸார் பறிமுதல் செய்தனர். அதை ஆய்வு செய்தபோது, அது பலூன்களைச் சுடும் விளையாட்டுகளில் பயன்படுத்தும் பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. 
இது குறித்த புகாரின் பேரில்,  கௌதம் உள்ளிட்ட 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com