சுடச்சுட

  

  விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 39 பேருக்கு மெச்சத் தகுந்த பணிக்கான வெகுமதி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. 
  விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,  காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்,சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
  திருட்டு வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்த மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஞானசேகர்,  தலைமைக் காவலர் தேவநாதன் ஆகியோருக்கும்,  விழுப்புரத்தில் திருநங்கை கொலை வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் ரேவதி, உதவி ஆய்வாளர் சத்தியசீலன் ஆகியோருக்கும், விழுப்புரம் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய 
  தலைமைக் காவலர் ஜோசப்,  மயிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்த உதவி ஆய்வாளர்கள் நந்தகுமார்,  நடராஜன், தலைமைக் காவலர்கள் ஸ்ரீபதி, அன்பரசன் ஆகியோருக்கும் வெகுமதி வழங்கப்பட்டது.
  செஞ்சியில் தம்பதியை தாக்கி நகை பறித்தவர்களை  கைது செய்த உதவி ஆய்வாளர்கள் மருதப்பன் குமார், தலைமைக் காவலர்கள் முனுசாமி, ஞானம், ஹரிஹரன் வினோத், மணிமாறன் ஆகியோருக்கும், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவத்தில்  கீழே கிடந்த ரூ.8,000 பணம் மற்றும் நகையுடன் இருந்த மணி பர்சை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த விழுப்புரம் தாலுகா காவலர் செல்வகணேஷுக்கும்,  கீழ்க்குப்பம் பகுதியில் என்எல்சி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,  குற்றவாளிகளை கைது செய்த காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா, சபரிமலை, மகேந்திரன், தலைமைக் காவலர் சக்திவேல், செந்தில், காவலர் மணிமாறன் ஆகியோருக்கும் வெகுமதி வழங்கப்பட்டது.
  போலீஸ் மோப்ப நாய்க்கு வெகுமதி... கள்ளக்குறிச்சியில் குற்ற வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து, சொத்துகளை பறிமுதல் செய்த உதவி ஆய்வாளர்கள் விநாயகம், பாலமுரளி ஆகியோருக்கும், கோட்டக்குப்பம் சோதனைச்சாவடியில் மதுப்புட்டிகள் கடத்தி வந்த லாரி மற்றும் காரை பறிமுதல் செய்த சோதனைச்சாவடி போலீஸார் அழகுவேல், சுந்தரமூர்த்தி, சிவசக்தி, மைந்தன் ஆகியோருக்கும், எலவனாசூர்கோட்டை அருகே சிறுவன் கொலை வழக்கில், அவரது சகோதரன் உள்ளிட்டோரை கைது செய்த துணை காவல் கண்காணிப்பாளர் ராமநாதன்,  உளுந்தூர்பேட்டை ஆய்வாளர் எழிலரசி,  உதவி ஆய்வாளர்கள் மாணிக்கம், அகிலன், தலைமைக் காவலர் மணிகண்டபெருமாள், எங்கள்துரை,  மதுரைவீரன், இளந்திரையன், செல்வகுமார் ஆகியோருக்கும்,  சிக்கலான இந்த கொலை வழக்கில், துப்பு துலக்க முக்கிய காரணமாக இருந்த, போலீஸ் மோப்ப நாய் ராக்கிக்கும் மெச்சத் தகுந்த பணியைப் பாராட்டி வெகுமதி வழங்கப்பட்டது.  
  நிகழ்ச்சியின் போது, தனிப் பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai