சுடச்சுட

  

  விழுப்புரம் நகராட்சியில் ஒப்பந்தப் பணி பெறுவதில் பிரச்னை

  By DIN  |   Published on : 15th August 2019 10:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை, தெரு மின் விளக்குகள் பராமரிப்புப் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி படிவங்களை அளிக்க வந்தவரை கட்சியினர் தடுத்ததாக பிரச்னை எழுந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
  விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட்ட 42 வார்டுகளில் தெரு மின் விளக்குகளை புதுப்பிக்கும் பொருட்டு எல்இடி மின் விளக்குகள் அமைத்தல், நவீன முறையில் மின்விளக்கு சுவிட்சுகளை பொருத்துதல் உள்ளிட்டப் பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் பணி, நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது.  
  ரூ.36 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான இந்த ஒப்பந்தப் பணிக்கு, நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஒப்பந்தப் புள்ளி படிவங்களைப் பெறும் வகையில் நகராட்சி அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் மூடிமுத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் அடங்கிய படிவங்களை பலரும் செலுத்தினர். மாலை 3 மணி வரை ஒப்பந்தப் படிவங்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  இந்த நிலையில், பெட்டியில் ஒப்பந்தப் படிவம் செலுத்த வந்த ஒப்பந்ததாரர் அகமது என்பவரை, அங்கிருந்த அதிமுக பிரமுகர் ஜியாவுதீன் உள்ளிட்ட சிலர் தடுத்ததாகத் தெரிகிறது. இதனால் அங்கு பிரச்னை ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. 
  இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் வி.வி.திருமால், தனிப்படை போலீஸாருடன் விரைந்து வந்து, ஒப்பந்தப் பெட்டியின் அருகே நின்று பிரச்னை செய்து கொண்டிருந்த நான்கு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். பிறகு, அவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
  இதையடுத்து, விழுப்புரம் தாலுகா ஆய்வாளர் கணேசன், உதவி ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து எந்தவித பிரச்னையுமின்றி ஒப்பந்ததாரர்கள்,  ஒப்பந்தப் படிவங்களை பெட்டியில் செலுத்திச் சென்றனர். 
  இந்தப் பிரச்னை குறித்து, நகராட்சி ஆணையர் எஸ்.லட்சுமியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: ஒப்பந்தப் புள்ளி படிவங்களை அளிப்பதில், இரு ஒப்பந்ததாரர்களிடையே பிரச்னை எழுந்து, சமாதானமாகிவிட்டனர். எனினும்,  அறிவித்தபடி மாலை வரை ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு, விதிகளின் படி திறந்து, உரியவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்றார்.
  இணைய வழியில் பெறப்படுமா?: விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில், பழைய முறைப்படி, மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் பெறுவதில் பிரச்னை ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. ஆகவே, அனைத்து ஒப்பந்தப் பணிகளுக்கும் இணைய வழியில் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai