Enable Javscript for better performance
விக்கிரவாண்டி பேரவைத் தொகுதி: இடைத் தேர்தலுக்காக தயாராகும் கட்சிகள்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    விக்கிரவாண்டி பேரவைத் தொகுதி: இடைத் தேர்தலுக்காக தயாராகும் கட்சிகள்! 

    By DIN  |   Published On : 22nd August 2019 07:53 AM  |   Last Updated : 22nd August 2019 07:53 AM  |  அ+அ அ-  |  

    விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்காக, அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினரும், முன்னாள் அமைச்சர் க.பொன்முடி தலைமையில் திமுகவினரும், கிராமங்களில் போட்டிப் போட்டு தேர்தல் பணியைத் தொடங்கியுள்ளதால், தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினராக இருந்த கு.ராதாமணி உடல் நலக்குறைவால் கடந்த 
    ஜூன் மாதம் உயிரிழந்தார். இதனால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதியுடன், ஏற்கெனவே காலியாக உள்ள நாங்குநேரி சட்டப் பேரவைத் தொகுதிக்கும், விரைவில் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே, இத்தொகுதிகளில் இடைத் தேர்தல் பணியில் கட்சியினர் களமிறங்கி விட்டனர். குறிப்பாக, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக,  திமுகவினர் தேர்தல் பிரசாரத்தையே தொடங்கியுள்ளனர். இரு கூட்டணிகளிலும், பிற கட்சிகள் இத்தொகுதியை கோர முன் வராததால், அதிமுக-திமுக இடையேதான் போட்டி என்பது உறுதியாகியுள்ளது.
    திமுக தீவிரம்: விக்கிரவாண்டி தொகுதியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள திமுகவினர் தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் க.பொன்முடி தலைமையில் கட்சியினர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கி, ஒன்றியங்கள் வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர். 
    விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், க.பொன்முடி தலைமையில் தேர்தல் பணிக்கான ஆலோசனை நடத்தப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர்கள் வாக்குகளை குறிவைத்து வியூகம் வகுக்கப்படுகிறது. வன்னியர் சங்க இட ஒதுக்கீடு போராட்டத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு, திமுக ஆட்சியில்தான் உதவிகளும், இடஒதுக்கீடும் தரப்பட்டதைக் கூறி வாக்குகளை கவர வேண்டும். சாதி, மதம் பார்க்காமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று, தனது பாணியில் க.பொன்முடி நிர்வாகிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார். தொடர்ந்து, ஊராட்சிகள் தோறும் சுற்றுப்பயணம் சென்று,  க.பொன்முடி கட்சியினரை சந்தித்து வருகிறார்.
    திமுக தரப்பில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கே மீண்டும் அங்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் வேட்பாளர் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, மாவட்டப் பொருளர் புகழேந்தி, துணைச் செயலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோரின் பெயர்களை கட்சித் தலைமைக்கு முன்மொழிந்துள்ளனர். இதனால், உரிய செல்வாக்குடன் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்காக காத்திருக்கும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா. ஜனகராஜ் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளனர்.
    வரிந்து கட்டும் அதிமுக: ஆளும் அதிமுகவை பொருத்தமட்டில் இந்த மாதத் தொடக்கத்திலேயே, அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. தொடர்ந்து, அதிமுக தொகுதிச் செயலர்கள் மூலம் தேர்தல் பணியை மேற்கொண்டுள்ளனர். அவ்வப்போது, அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் வந்து, கட்சியினருடன் தேர்தல் ஆலோசனை நடத்தி வருகிறார்.
    இதனிடையே, அண்மையில் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று ஒரே நாளில் 33 கிராமங்களில் சாலைப் பணி, பாலங்கள், அரசு கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டி, அரசுத் திட்டப் பணிகளையும் பரவலாகத் தொடங்கினார். அடுத்தக் கட்டமாக, மேலும் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதிய திட்டங்களுக்கான தொடக்க விழாவையும் அறிவித்துள்ளனர்.
    அதிமுக தரப்பில், கடந்த முறை தேர்தலில் நின்று தோல்வியடைந்த ஒன்றியச் செயலர் சிந்தாமணி வேலு, காணை ஒன்றியச் செயலர் முத்தமிழ்ச்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எசாலம் பன்னீர்,  பி.கே.சுப்பிரமணி போன்றோரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
    ஏ.ஜி.சம்பத் போட்டி?: இதனிடையே,  இந்தத் தொகுதியின் முன்னாள் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத், இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, ஆர்வத்துடன் கிராமங்களுக்குச் சென்று, ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். மு.க. அழகிரி ஆதரவாளராகக் கருதப்படும் இவர், ஏற்கெனவே அத்தொகுதியில் இரு முறை வெற்றி பெற்றவர். திமுக மாவட்டச் செயலராகவும் இருந்தவர்.  மாவட்டச் செயலராக க.பொன்முடி வந்த பிறகு ஓரங்கட்டப்பட்ட அவர், மீண்டும் போட்டிக்கு களம் இறங்கியுள்ளது திமுக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp