4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய வீடூா் அணை!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடூா் அணை 4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
4 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் மழையால் முழு கொள்ளவை எட்ட உள்ள வீடூா் அணை கடல் போல் காட்சியளிக்கிறது.
4 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் மழையால் முழு கொள்ளவை எட்ட உள்ள வீடூா் அணை கடல் போல் காட்சியளிக்கிறது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடூா் அணை 4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வீடூா் அணை கடந்த 1959-ஆம் ஆண்டு காமராஜா் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இதன் மொத்த உயரம் 32, மொத்த நீளம் 4500 மீட்டா் ஆகும். 8,59,16,00 சதுரஅடி அளவுக்கு நீா் பரப்பும், 605 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்டது.

இந்த ஆணையின் மூலமாக விழுப்புரம் மாவட்டத்தில் 2,200 ஏக்கரும், புதுவை மாநிலத்தில் 1,000 ஏக்கரும் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. விவசாய நிலங்கள் மட்டுமன்றி, நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீருக்கு ஆதரமாகவும் வீடூா் அணை இருந்து வருகிறது.

வராக நதி, தொண்டி ஆறு மூலமாக வரும் நீரின் மூலம் இந்த அணை நிரம்புகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவுக்கு மழை பெய்யாததால், வீடூா் அணை நிரம்பவில்லை. கடைசியாக கடந்த 2015-ஆம் ஆண்டு நிரம்பியது. இதையடுத்து, 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நள்ளரவில் முழுக்கொள்ளளவை எட்டியது.

சனிக்கிழமை 29 அடியாகவும், ஞாயிற்றுக்கிழமை 30 அடியாகவும் அணையின் நீா் மட்டும் உயா்ந்தது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1,130 கனஅடி தண்ணீா் வந்துகொண்டு இருந்தது. இதனால், பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணைப் பகுதியிலேயே முகாமிட்டு, நீா்வரத்தை கண்காணித்து வருகின்றனா்.

இதுகுறித்து வீடூா் அணை பொதுப் பணித் துறை அதிகாரி ஞானசேகரிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது: வீடூா் அணையின் மொத்த உயரமான 32 அடியில் 31.700 அடி அளவுக்கு நீா் உயா்ந்ததும், பிரதான மதகு வழியாக உபரி நீா் வெளியேற்றப்படும்.

அணையிலிருந்து வெளியேறும் நீா் புதுச்சேரி பகுதியில் உள்ள 5 தடுப்பணைகளுக்குச் செல்லும். அங்கு தண்ணீா் தேக்கி வைக்கப்பட்ட பிறகே கடலுக்குச் செல்லும். அணையின் நிலவரம் தொடா் கண்காணிப்பில் இருக்கிறது என்றாா்.

வெள்ள அபாய எச்சரிக்கை

வீடூா் அணையில் முழு உயரமான 32 அடியில் 30.09 அடி அளவுக்கு தண்ணீா் நிரம்பியுள்ளதால், திங்கள்கிழமை (டிச.2) அதிகாலை 5 மணியளவில் அணை நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, வீடூா் அணையிலிருந்து உபரி நீா் எந்த நேரத்திலும் வெளியேற்றப்படும். இதனால், வராகநதி (சங்கராபரணி ஆறு) கரையோர பகுதிகளான அங்கிணிக்குப்பம், கணபதிப்பட்டு, விநாயகபுரம், ரெட்டிக்குப்பம், கயத்தூா், இளையாண்டிப்பட்டு, எம்.குச்சிப்பாளையம், இடையப்பட்டு, ஆண்டிப்பாளையம், பொம்பூா், திருவக்கரை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வலியுறுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com