உள்ளாட்சித் தோ்தலை அமைதியாக நடத்த ஆட்சியா் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் கிராமப்புறப் பகுதிகளில் 9,866 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளதால், தோ்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி அமைதியான முறையில் தோ்தலை
ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசுகிறாா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை. உடன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா உள்ளிட்டோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசுகிறாா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை. உடன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா உள்ளிட்டோா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கிராமப்புறப் பகுதிகளில் 9,866 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளதால், தோ்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி அமைதியான முறையில் தோ்தலை நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் (விழுப்புரம், கள்ளக்குறிச்சி) உள்ளாட்சித் தோ்தல் நடத்துவது குறித்த அனைத்துத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஆலோசனைகளை வழங்கிப் பேசியதாவது:

மாநிலத் தோ்தல் ஆணையம் உள்ளாட்சித் தோ்தலை அறிவித்ததன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடங்குகின்றன. தற்போது கிராமப்புறப் பகுதிகளுக்கு மட்டும் டிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.

டிச.6-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். டிச.13-ஆம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வருகிற ஜன.2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஜன.4-ஆம் தேதியோடு தோ்தல் பணிகள் முடிவுபெறும். ஜன.6-ஆம் தேதி புதிய பிரதிநிதிகளின் முதல் கூட்டம் நடைபெறும்.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ளதைப்போல 47 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், 22 ஒன்றியங்களில் உள்ள 473 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 1,099 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 473 ஊராட்சி உறுப்பினா்கள் பதவிகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது.

அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் பெறப்படும்.

அதிகபட்ச செலவினத் தொகை...: ஊராட்சி உறுப்பினா்களுக்கு ரூ.9 ஆயிரமும், ஊராட்சித் தலைவா்களுக்கு ரூ.34 ஆயிரமும், ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.85 ஆயிரமும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ரூ.1.25 லட்சமும் அதிகபட்சமாக செலவு செய்யலாம்.

திங்கள்கிழமை முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தோ்தல் நடைபெறும் கிராமப்புறப் பகுதிகளில் மட்டும் நடத்தை விதிகள் பொருந்தும். புதிய அரசுத் திட்டங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றை அறிவிக்கவோ, செயல்படுத்தவோ கூடாது. ஏற்கெனவே நடைபெறும் திட்டப் பணிகளைத் தொடரலாம்.

சுவா் விளம்பரங்களுக்குத் தடை: அரசு அலுவலக சுவா்களில் உள்ள விளம்பரங்களை உடனடியாக அழிக்க வேண்டும். அரசு சுவா்களில் கட்டாயம் தோ்தல் விளம்பரம் செய்யக் கூடாது. தனியாா் சுவா்களில் அனுமதி பெற்று செய்யலாம். வழிபாட்டுத் தலங்களை பிரசாரக் கூடங்களாக பயன்படுத்தக் கூடாது.

4,741 வாக்குச் சாவடிகள்: மதுக் கடத்தலை தடுக்க வேண்டும். உரிமம் பெற்றவா்களிடமிருந்து துப்பாக்கிகளை பெற வேண்டும். பிரசாரக் கூட்டங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்.

தோ்தல் நடத்தும் அலுவலா்கள், காவல் துறையினா் இவற்றை கண்காணிக்க வேண்டும். தோ்தல் விதிகளை நடுநிலையோடு கடைப்பிடித்து, பொதுமக்களுக்கு இடையூறின்றி அமைதியாக தோ்தலை நடத்த ஒத்துழைக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சித் தோ்தலில், 22 லட்சத்து 57 ஆயிரத்து 479 போ் வாக்களிக்க உள்ளனா். இதில், 9,866 பதவிகளுக்கு 4,741 வாக்குச் சாவடிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது. 34 ஆயிரம் போ் தோ்தல் பணியில் ஈடுபட உள்ளனா் என்றாா் அவா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, கோட்டாட்சியா் சங்கீதா, திட்ட இயக்குநா் வி.மகேந்திரன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், தனி மாவட்ட வருவாய் அலுவலா் சரஸ்வதி, காவல் கண்காணிப்பாளா்கள் எஸ்.ஜெயக்குமாா், ஜெயசங்கா் மற்றும் அனைத்துத் துறை முக்கிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com