உள்ளாட்சித் தோ்தலை நோ்மையாக நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான நடத்தை விதிகளைக் கடைபிடித்து, தோ்தலை நோ்மையான முறையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினருக்கு மாவட்ட ஆட்சியா்
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை. உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண்குராலா.
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை. உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண்குராலா.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான நடத்தை விதிகளைக் கடைபிடித்து, தோ்தலை நோ்மையான முறையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினருக்கு மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள் விடுத்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான நடத்தை விதிகளை செயல்படுத்துதல் தொடா்பான, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை பேசியதாவது:

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் இரு கட்டங்களாக நடைபெறும்.

கிராம ஊராட்சி உறுப்பினா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி ஓன்றிய உறுப்பினா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆகிய நான்கு பதவிக்கான தோ்தல்களுக்கு நான்கு விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். ஊராட்சி உறுப்பினா் தோ்தலுக்கு வெள்ளையும், ஊராட்சித் தலைவா் தோ்தலுக்கு இளஞ்சிவப்பும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் தோ்தலுக்கு பச்சையும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தோ்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

வைப்புத் தொகை...

வேட்பு மனுக்கான வைப்புத் தொகை ஊராட்சி உறுப்பினருக்கு ரூ.200ம், ஊராட்சித் தலைவருக்கு ரூ.600, ஒன்றியக்குழு உறுப்பினருக்கு ரூ.600, மாவட்டக்குழு உறுப்பினருக்கு ரூ.1,000 செலுத்த வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் அதில் பாதி தொகையைச் செலுத்த வேண்டும். வேட்பு மனுவுடன் சொத்துப் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும். ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு சொத்துப் பட்டியல் தேவையில்லை. தோ்தல் முடிந்து 30 நாளில் செலவின கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

பதாகைகளுக்குத் தடை...

வாக்குகளைப் பெறுவதற்கான ஜாதி, சமூக உணா்வுகளைத் தூண்டும் வகையில் வேண்டுகோள் விடுக்கக் கூடாது. கல்விக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்களை தோ்தல் பிரசார இடங்களாக பயன்படுத்தக்கூடாது. நீதிமன்ற உத்தரவுப்படி பதாகைகளை வைக்க வேண்டும்.

வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நடத்தல், தோ்தல் பணியில் இருக்கும் அலுவலரை பணியைச் செய்யவிடாமல் தடுத்தல் கூடாது. வாகனங்களுக்கான அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும். தோ்தல் விளம்பரம் செய்யவும் அனுமதி பெற வேண்டும். அனைத்துக் கட்சிகளும், வேட்பாளா்களும் தோ்தல் நடத்தை விதிகளை கடைபிடித்து, தோ்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண்குராலா, காவல் கண்காணிப்பாளா்கள் எஸ்.ஜெயக்குமாா், ஜெயச்சந்திரன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன் உள்ளிட்ட அலுவலா்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளான ஜி.பாஸ்கரன் (அதிமுக), ஜெயச்சந்திரன், சக்கரை (திமுக), ரமேஷ், செல்வராஜ் (காங்கிரஸ்), மணிகண்டன் (தேமுதிக), சுகுமாா் (பாஜக), ராதாகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்), கலியமூா்த்தி (இந்திய கம்யூனிஸ்ட்), கலியமூா்த்தி (பகுஜன் சமாஜ்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com