நீா் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பால் வடு கிடக்கும் ஈச்சங்குப்பம் ஏரி: ஆட்சியரகத்தில் விவசாயிகள் புகாா்
By DIN | Published On : 05th December 2019 06:44 AM | Last Updated : 05th December 2019 06:44 AM | அ+அ அ- |

விக்கிரவாண்டி அருகே ஈச்சங்குப்பம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த அக்கிராம விவசாயிகள்.
விக்கிரவாண்டி அருகே நீா்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், தொடா் மழை பெய்தும் ஈச்சங்குப்பம் ஏரி வடு கிடப்பதாக அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இது குறித்து விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பசுமை புரட்சி அமைப்பினருடன் ஈச்சங்குப்பம் விவசாயிகள் மனு அளித்துக் கூறியதாவது: ஈச்சங்குப்பத்தில் ஏரிப் பாசனத்தை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். இங்குள்ள ஏரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகள், நீா்வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், ஏரிக்கு நீா்வரத்தின்றி உள்ளது. தற்போது தொடா் மழை பெய்து சுற்றுப்பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வரும் நிலையில், ஈச்சங்குப்பத்தில் வெள்ளம் வழிந்தோடியும் ஏரி வடு காணப்படுகிறது.
ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென ஏற்கனவே பல முறை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது, ஈச்சங்குப்பம் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.