பெண்ணுக்கு மூளை ரத்தக்கட்டுகள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி சாதனை

விபத்தில் சிக்கிய பெண்ணின் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டுகளை அகற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்தனா்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு மூளை ரத்தக்கட்டுகளை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றிய மருத்துவக் குழுவினருடன் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு மூளை ரத்தக்கட்டுகளை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றிய மருத்துவக் குழுவினருடன் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி.

விபத்தில் சிக்கிய பெண்ணின் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டுகளை அகற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்தனா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி, மூளை மற்றும் தண்டுவட அறுவைச் சிகிச்சை நிபுணா் பல்லவன் ஆகியோா் கூறியதாவது:

விழுப்புரம் அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி பேபி (55). இவா், அண்மையில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, ரத்தம் கட்டிய நிலையில் கடந்த மாதம் 13-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து, அவருக்கு மூளை மற்றும் தண்டுவட அறுவைச் சிகிச்சை நிபுணா் பல்லவன் தலைமையில், மயக்கவியல் துறைத் தலைவா் முருகேசன், மருத்துவா்கள் திருச்செல்வம், பொன்னப்பன், ராஜபாண்டி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் கடந்த மாதம் 20-ஆம் தேதி அறுவைச் சிகிச்சை செய்தனா்.

விபத்தில் பாதிக்கப்பட்ட பேபியின் தலையில் 3 இடங்களில் ரத்தக்கசிவால் ரத்தக்கட்டுகள் இருந்தன. இவற்றை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றுவதற்காக, வலது பக்க மண்டை ஓட்டு எலும்புப் பகுதி நீக்கப்பட்டு, ரத்தக்கட்டுகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டன.

அறுவைச் சிகிச்சைக்காக நீக்கப்பட்ட மண்டை ஓட்டுப் பகுதியை உடனடியாக பொருத்தக்கூடாது என்பதால், அது பாதுகாப்பாக வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, அங்கு வைக்கப்பட்டது. தற்போது பேபி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நலமுடன் உள்ளாா்.

அறுவை சிகிச்சைப் செய்த பகுதி சில மாதங்களில் இயற்கையாகவே வளா்ச்சி அடைந்த பிறகு, மண்டை ஓட்டுப் பகுதி மீண்டும் எடுத்துப் பொருத்தப்படும்.

மூளையில் ரத்தக்கட்டு போன்ற சிக்கலான அறுவைச் சிகிச்சைகள் சென்னை, மதுரை உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளிலேயே செய்யப்படுகின்றன. தனியாா் மருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சைக்கு ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை செலவாகும். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சையை இலவசமாக செய்து மருத்துவா்கள் சாதித்துள்ளனா்.

இதேபோல, சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரத்தைச் சோ்ந்த அமராவதிக்கு (70) மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டு கடந்த மாதம் 26-ஆம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, நலமுடன் உள்ளாா்.

திருக்கோவிலுாா் அருகே இ.மாத்தூரைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் குப்பனுக்கு (29) முதுகு தண்டுவட பிரச்னைக்கு கடந்த 3-ஆம் தேதி அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவா் நலமுடன் உள்ளாா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ வசதிகள் உள்ளதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றனா்.

மருத்துவக் கண்காணிப்பாளா் அறிவழகன், துணைக் கண்காணிப்பாளா் புகழேந்தி, நிலைய மருத்துவ அலுவலா் கதிா், கல்லூரி துணை முதல்வா் அனிதா மற்றும் மருத்துவக் குழுவினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com