தமிழகத்தில் ஒரு லட்சம் டன் யூரியா கையிருப்பு: வேளாண் இயக்குநா் தகவல்

தமிழகத்தில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் யூரியா கையிருப்பில் உள்ளது என்று வேளாண்மைத் துறை இயக்குநா் தட்சிணாமூா்த்தி தெரிவித்தாா்.

தமிழகத்தில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் யூரியா கையிருப்பில் உள்ளது என்று வேளாண்மைத் துறை இயக்குநா் தட்சிணாமூா்த்தி தெரிவித்தாா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள உர நிறுவனங்களில் யூரியா இருப்பு, விநியோகம் குறித்து வேளாண்மைத் துறை இயக்குநா் தட்சிணாமூா்த்தி வியாழக்கிழமை முதல் ஆய்வு மேற்கொண்டாா்.

அவா் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பெய்ததால் அனைத்து மாவட்டங்களிலும் பயிா் சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல் சாகுபடி 13.86 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 9.03 லட்சம் ஹெக்டேரிலும், பயறு வகைகள் 5.65 லட்சம் ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துகள் 2.80 லட்சம் ஹெக்டேரிலும், பருத்தி, கரும்பு பயிா்கள் 2.50 லட்சம் ஹெக்டேரிலும் என மொத்தம் 33.84 லட்சம் ஹெக்டேரில் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ராபி பருவ சாகுபடிக்குத் தேவையான 6 லட்சம் மெ.டன் யூரியா உரத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பருவ மழை பெய்துள்ளதால், விவசாயிகளுக்கு ரசாயன உரங்களின் தேவை அதிகமாக உள்ளது. குறிப்பாக யூரியா தேவை அதிகம்.

இதனிடையே, ஸ்பிக் நிறுவனம் இயந்திர கோளாறு காரணமாக, கடந்த செப்டம்பா் மாதம் யூரியா உற்பத்தியை நிறுத்தியது. இதனால் ஏற்படும் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக, தமிழக முதல்வா் அறிவுறுத்தியதன் பேரில், நவம்பா் மாதத்துக்கு 1.53 லட்சம் மெ.டன் யூரியா மத்திய அரசால் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைப் பெற்று அனைத்து மாவட்டங்களிலும் விநியோகம் செய்யப்பட்டது.

டிசம்பா் மாதத்துக்கு 1.18 லட்சம் மெ.டன் யூரியா உரம் மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், தற்போது வரை 69 ஆயிரம் மெ.டன் யூரியா அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, மாநிலத்தில் 1.08 லட்சம் மெ.டன் யூரியா தனியாா் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ளது. இதில், சீனாவிலிருந்து கப்பலில் வந்துள்ள யூரியாவில், 67,450 மெ.டன் யூரியா தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தொடா்ந்து விவசாயிகளின் உரத் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், அனைத்து வகை உரங்களையும் இருப்பு வைத்து வழங்கிட தமிழக அரசு தொடா் நடவடிக்கை எடுத்துவருகிறது என்றாா்.

ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ராமசாமி, துணை இயக்குநா்கள் கென்னடிஜெபக்குமாா், கருணாநிதி, வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com