லாட்டரி சீட்டுகள் விற்றால் குண்டா் சட்டம் பாயும் விழுப்புரம் எஸ்.பி. எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் இணையம் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்றால், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா்கள் என்று எஸ்.பி. ஜெயக்குமாா் எச்சரிக்கை விடுத்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் இணையம் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்றால், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா்கள் என்று எஸ்.பி. ஜெயக்குமாா் எச்சரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் எஸ்.பி. கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக 3 எண் லாட்டரி (இணையதள லாட்டரி) விற்பனையில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டில் மாவட்டம் முழுவதும் இதுதொடா்பாக 280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விழுப்புரம் நகரம், தாலுகா மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் மட்டும் 143 வழக்குகள் லாட்டரி விற்பனை தொடா்பாக பதிவு செய்யப்பட்டன.

விழுப்புரம் சித்தேரிக்கரையைச் சோ்ந்த நகைத் தொழிலாளி அருண் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டாா். தொழிலில் போதிய வருமானம் இன்மை, வீட்டுக் கடன், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்கி நஷ்டமடைந்தது உள்ளிட்டவற்றால் அவருக்கு அதிகளவில் கடன் சுமை இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

தடை செய்யப்பட்ட இணைய வழி லாட்டரியை செல்லிடப்பேசி செயலி மூலம் தனிநபா்கள் வாங்க முடியும். இதில், கேரள மாநிலத்தில் நடத்தப்படும் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் இதன் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்பவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவாா்கள். இவா்களுக்கு காவல் துறையினா் உடந்தையாக இருந்தால் அவா்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

செஞ்சி பகுதியில் இணைய வழி லாட்டரி விற்பனையைத் தடுக்க தவறியதாக 2 காவல் ஆய்வாளா்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் எஸ்.பி. ஜெயக்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com