Enable Javscript for better performance
செ.கொத்தமங்கலத்தில் தொன்மைத் தடயங்கள்:தொல்லியல் அலுவலர் நேரில் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    செ.கொத்தமங்கலத்தில் தொன்மைத் தடயங்கள்: தொல்லியல் அலுவலர் நேரில் ஆய்வு

    By DIN  |   Published on : 01st February 2019 07:39 AM  |   அ+அ அ-   |    |  

    விழுப்புரம் அருகே உள்ள செ.கொத்தமங்கலம் கிராமத்தில் கண்டறியப்பட்ட தொன்மைத் தடயங்களை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், தொல்லியல் அலுவலர் வியாழக்கிழமை அந்தக் கிராமப் பகுதியில் நேரில் ஆய்வு செய்தார்.
    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரணி பகுதியை அடுத்துள்ள  செ.கொத்தமங்கலம் கிராமத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான பானை ஓடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் பகுதி பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் நிறைந்த பகுதியாக வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளது.
    கொத்தமங்கலம் கிராமத்தில் பல்லவர் கால மூத்ததேவி சிற்பம், சோழர் கால சிற்பங்கள் மற்றும் நாயக்கர் கால சதிக்கற்கள் உள்ளன. விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று 
    ஆர்வலருமான கோ.செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் கடந்த நவம்பர் மாதத்தில் இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, பழைமையான ஓடுகள் உள்ளிட்ட தொன்மை தடயங்களை கண்டறிந்தனர். இதுகுறித்து, தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.
    இதனைத் தொடர்ந்து, கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள தொல்லியல் தடயங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்,  சென்னை தொல்லியல் துறை ஆணையர் ஆகியோருக்கு எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் உள்ளிட்டோர் நேரில் கோரிக்கை விடுத்தனர். தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கும் இதுகுறித்து மனு அனுப்பினர்.
    இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர், தொல்லியல் துறை ஆணையர் ஆகியோரின் உத்தரவின்பேரில், கொத்தமங்கலம் கிராமத்தில் அகழாய்வு மேற்பரப்பினை ஆய்வு செய்திடவும், மூத்ததேவி சிற்பம் உள்ளிட்ட வரலாற்றுத் தடயங்களை பாதுகாப்பது குறித்தும், ஆய்வு செய்து அறிக்கையளிப்பதற்கு தொல்லியல் அலுவலரை நியமித்துள்ளதாக எழுத்தாளர் செங்குட்டுவனுக்கு பதில் அனுப்பியிருந்தனர்.
    அதன்பேரில், சிதம்பரத்தைச் சேர்ந்த தொல்லியல் அலுவலர் பொ.பாஸ்கர்  வியாழக்கிழமை செ.கொத்தமங்கலம் கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கொத்தமங்கலம் பகுதியில் பானை ஓடுகள் கிடைத்த பகுதி,  மூத்ததேவி சிற்பங்கள் உள்ளிட்ட தொன்மைப் பகுதிகளை பார்வையிட்டு, அந்தப் பகுதி மக்களிடம் இதுகுறித்து கேட்டறிந்து தொல்லியல் அலுவலர் பொ.பாஸ்கர் ஆய்வு செய்தார்.
    இதுகுறித்து விரைவில் தொல்லியல் ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்துச் சென்றுள்ளது வரலாற்று ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp