பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 78 ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி
By DIN | Published On : 15th February 2019 09:36 AM | Last Updated : 15th February 2019 09:36 AM | அ+அ அ- |

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்று, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 78 ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமை மீண்டும் பணி வழங்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் 1,584 ஆசிரியர்கள் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அளவில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் என 39 பேரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் அளவில் 39 பேரும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த பணியிடை நீக்க உத்தரவை தமிழக அரசு ரத்து செய்து புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 39 பேருக்கும் அந்தந்த கல்வி மாவட்ட அளவில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மீண்டும் பணி செய்வதற்கான பணி ஆணையை வியாழக்கிழமை வழங்கினர்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 39 பேருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி வியாழக்கிழமை பணி ஆணை வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பணியிடை நீக்க காலத்தில் காலியிடத்தில் வேறு ஆசிரியர்கள் நியமனம், இட மாறுதல் கோருவோருக்கு பணியிட மாற்றம் வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கடலூர் மாவட்டத்தில் அவ்வாறு யாரும் கோராததால், தற்போது பணி ஆணை வழங்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அந்தந்தப் பள்ளிகளிலேயே பணி வழங்கப்பட்டுள்ளது. இது அரசு எடுக்கும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு உள்பட்டது என்ற விதியின் அடிப்படையிலேயே பணி வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.