வீரட்டானேஸ்வரர் கோயில் மாசிமகத் தேரோட்டம்

திருக்கோவிலூர்-கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாசிமகத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
திருக்கோவிலூர்}கீழையூரில் நடைபெற்ற வீரட்டானேஸ்வரர் கோயில் மாசிமகத் தேரோட்டம்.
திருக்கோவிலூர்}கீழையூரில் நடைபெற்ற வீரட்டானேஸ்வரர் கோயில் மாசிமகத் தேரோட்டம்.


திருக்கோவிலூர்: திருக்கோவிலூர்-கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாசிமகத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

அட்ட வீரட்டானங்களில் இரண்டாவதாகத் திகழும் இந்தக் கோயிலில், ஆண்டுதோறும் தை அமாவாசைக்குப் பிறகு மாசிமகத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். 

அதன்படி, நிகழாண்டுக்கான மாசிமக பிரமோற்சவ விழா, கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 

முன்னதாக, அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாச்சனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவர்ண பூஜை, சிவ ஆவாஹனம், பஞ்சமூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றன. 

தொடர்ந்து, சுவாமி தேரடி வீதியில் எழுந்தருளினார். அப்போது தேருக்கு சிறப்பு பூஜைகள்,  ரதா ரோகனம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தேர் உபயதாரர் மலேசியாவைச் சேர்ந்த டத்தோ சோமசுந்தரம் முன்னிலையில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விநாயகர், வீரட்டானேஸ்வரர் (சோமாஸ்கந்தர்), அம்மன், பரிவார சுவாமிகள் ஆகிய மூன்று தேர்கள் மாட வீதிகள் வழியாக வலம் வந்து, மாலை 5.30 மணிக்கு மீண்டும் நிலையை அடைந்தன. 

இரவு 7 மணிக்கு கோயிலில் பிராயச்சித்தம் சாந்தி பரிகார அஸ்திர ஹோமங்கள் நடைபெற்று, மஹா அபிஷேகத்தின் நிறைவாக, தீபாராதனை நடைபெற்றது. 
பின்னர் தேவார, திருவாசக பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி வீதியுலா நடைபெற்றது. 

விழாவின் நிறைவாக, செவ்வாய்க்கிழமை (பிப்.19) நண்பகல் 12 மணியளவில் தென்பெண்ணையாற்றில் மாசிமகத் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

தேரோட்டத்தில் விபத்து: திருக்கோவிலூரைச் சேர்ந்த அப்பாவு மகன் கண்ணண் (65), தேர் சக்கரத்துக்குக் கட்டைபோடும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அவர் தேர் சக்கரத்தில் சிக்கினார். இதில், அவரது வலது கால் துண்டானது. இதனால், 2 மணி நேரம் தாமதமாக பரிகார பூஜைகள் செய்யப்பட்டு, தேரோட்டம் நடைபெற்றது. தேரடி வீதி, வடக்கு வீதிகளில் கோயிலுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், மாட வீதிகள் மிகவும் குறுகலான நிலையில் காணப்படுகிறது. இதனால், தேரை வடம் பிடித்து இழுக்கும் போது, விபத்தில் சிக்கிக் கொள்வதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், ஆண்டுதோறும் 5 தேர்கள் பவனி வரும் நிலையில், நிகழாண்டு 3 தேர்கள் மட்டுமே பவனி வந்தன. மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியே இதற்கு காரணம் என கோயில் நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com