முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடக்கம்: 41 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்
By DIN | Published On : 28th February 2019 09:02 AM | Last Updated : 28th February 2019 09:02 AM | அ+அ அ- |

வருகிற மார்ச் 1ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை விழுப்புரம் மாவட்டத்தில் 41 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மொழிப் பாடத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 144 மையங்களில் நடைபெறும் இந்தத் தேர்வை 20 ஆயிரத்து 68 மாணவர்களும், 21 ஆயிரத்து 3 மாணவிகளும் என மொத்தம் 41 ஆயிரத்து 71 பேர் எழுதுகின்றனர். 2,176 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 3,080 கல்வித் துறை ஊழியர்கள் தேர்வுப் பணியில் பங்கேற்கின்றனர். 387 பறக்கும் படையினர் தேர்வை கண்காணிக்கவுள்ளனர். மார்ச் 19-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். கல்வித் துறை இணை இயக்குநர் அருள்முருகன், கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிளஸ் 2 தேர்வுக்கான வினாத்தாள்கள் வரவழைக்கப்பட்டு, 6 கல்வி மாவட்டங்களுக்கும் வழங்கும் விதமாக, தனித்தனியாக 7 இடங்களில், போலீஸ் பாதுகாப்புடன், வினாத் தாள் கட்டுக்காப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தேர்வு தொடர்பாக விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், பறக்கும் படையினருக்கு
கல்வித் துறை இணை இயக்குநர் அருள்முருகன், முதன்மைக் கல்வி அலுவலர்
க.முனுசாமி ஆகியோர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். நேர்முக உதவியாளர்கள் சேவியர், காளிதாஸ், கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் மைய ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.