விழுப்புரத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 05th January 2019 08:29 AM | Last Updated : 05th January 2019 08:29 AM | அ+அ அ- |

மழையின்மையால் விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழுக் கூட்டம், விழுப்புரத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஐ.சகாபுதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.கலியமூர்த்தி தொடக்க உரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் எஸ்.மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் ஆகியோர் வேளாண் பிரச்னைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயக் கல்லூரியை அமைக்க வேண்டும். மழை பொய்த்துவிட்டதால், வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தொடர்ந்து, மூன்றாண்டுகள் வறட்சியால், தேசிய வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
நந்தன்கால்வாய் திட்டத்தை தென்பெண்ணை ஆற்றுடன் இணைக்க வேண்டும். கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு நிவாரணத் தொகை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய இடுபொருள்களுக்கான விலையை குறைப்பதுடன், விளைபொருள்களுக்கு உரிய விலையும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளர் ஆர்.ராமமூர்த்தி நன்றி கூறினார்.