சுடச்சுட

  

  விழுப்புரம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை

  By DIN  |   Published on : 12th January 2019 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத பணம் ரூ.14,600 பறிமுதல் செய்யப்பட்டது.
  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி தேவநாதன், ஆய்வாளர் சதீஷ் தலைமையிலான போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்திலுள்ள ஊரக வளர்ச்சித் துறை தணிக்கைப் பிரிவிலும், தணிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. உதவி இயக்குநர் அ.துரைசாமி, கண்காணிப்பாளர் நீலவேணி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அலுவலர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
  இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ.14,600 ரொக்கம், ஆவணங்களை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
  பொங்கல் பண்டிகையொட்டி, சில அதிகாரிகள், அலுவலர்கள் பரிசுப் பொருள்களை அன்பளிப்பாக பெறுவதாக எழுந்த புகாரின் பேரில், இந்த சோதனை நடத்தப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்ட தகவல் பரவியதும், இரண்டு தளங்களிலும் உள்ள பிற அரசுத் துறை அலுவலகங்களை விரைந்து மூடிவிட்டு அலுவலர்கள் வெளியேறினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai