சுடச்சுட

  

  சுங்கச்சாவடிகளில் அணிவகுக்கும் வாகனங்கள்: இலவசமாக அனுமதித்து நெரிசல் சமாளிப்பு

  By DIN  |   Published on : 13th January 2019 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சனிக்கிழமை படையெடுத்ததால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. இதனால் நெரிசலை சமாளிக்க ஊழியர்கள் சிறிது நேரம் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்பி வைத்தனர்.
  பொங்கல் விடுமுறையை யொட்டி சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் சனிக்கிழமை முதல் சொந்த ஊர்களுக்கு பயணிக்கத் தொடங்கினர்.
  வேலைக்குச் செல்வோர், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பேருந்துகள், கார்கள், பைக்குகளில் புறப்பட்டனர். இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்தது. இதன்காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் ஓங்கூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய சுங்கச்சாவடிகளில் காலை 10 மணி முதல் வாகனங்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கின.
  சுங்கச்சாவடிகளில் இலவசமாக அனுமதி: தொடர்ச்சியாக, திருச்சி வழித்தடத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கூடுதலாக இரண்டு வழிகள் திறக்கப்பட்டன.
  இருப்பினும், வாகன நெரிசலை சமாளிக்க முடியாமல் போனதால் சிறிது நேரம் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை உடனுக்குடன் அனுப்பி வைத்தனர்.
  இதேபோல, விக்கிரவாண்டி, ஓங்கூர் சுங்கச்சாவடிகளிலும் நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது.
  விழுப்புரம் அருகே அரசூர் பகுதியில் காலை நேரத்தில் சாலை சீரமைப்புப் பணி நடைபெற்றதால், எதிர்புற சாலையில் வாகனங்களை திருப்பி விட்டனர். இருப்பினும், வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சாலைப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
  மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு நிலவரங்களை ஆய்வு செய்தார். மேலும், சுங்கச்சாவடிகளில் போலீஸார் நியமிக்கப்பட்டு வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. எனினும், அனைத்து வாகனங்களும் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் தாமதமாகவே சென்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai