பொங்கல் ஊக்கத்தொகையும் புறக்கணிப்பு: பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தி

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், பகுதிநேர ஆசிரியர் கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், பகுதிநேர ஆசிரியர் கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
 தமிழக அரசுப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், 2012-ஆம் ஆண்டு முதல் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். உடல்கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, இசை, தையல், கட்டடக்கலை, வாழ்க்கைக் கல்வி உள்ளிட்ட பாடங்களை 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போதித்து வருகின்றனர். ரூ.7,700 மாத ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 இவர்கள் ஊதிய உயர்வு, சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர். நிகழாண்டில் அரசு ஊழியர்களில் சி,டி பிரிவினருக்கு பொங்கல் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
 இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: 7 ஆண்டுகளாக சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம். ஆந்திரத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.14,203 தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. அங்கு ஒப்பந்த, தொகுப்பூதியப் பணியில் உள்ள பெண்களுக்கு 6 மாத ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.
 தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியமும் வழங்கப்படுவதில்லை. 7-ஆவது ஊதியக் குழுவில் அனைத்து தொகுப்பூதிய பகுதிநேர ஊழியர்களுக்கும் பரிந்துரைக்கப்பட்ட 30 சதவீத ஊதிய உயர்வு அரசாணையும் செயல்படுத்தவில்லை.
 அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் உள்ள அனைத்து தொகுப்பூதிய ஊழியர்களுக்கும் பொங்கல் ஊக்கத்தொகை வழங்கப்படும் நிலையில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை.
 ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வேலைநிறுத்தத்தின் போது, பகுதிநேர ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிகள் இயக்கப்பட்டன. கல்வித் துறைக்கு உறுதுணையாக செயல்பட்டு வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பணிநிரந்தரம், ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com