மணலூர்பேட்டையில் ஜனவரி 19-இல் ஆற்றுத் திருவிழா: சாத்தனூர் அணை திறக்கப்படுமா?

திருக்கோவிலூர், மணலூர்பேட்டையில் வரும் 19-ஆம் தேதி ஆற்றுத் திருவிழா நடைபெற உள்ளது.

திருக்கோவிலூர், மணலூர்பேட்டையில் வரும் 19-ஆம் தேதி ஆற்றுத் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர்களின் நாகரீகம் நதிக்கரைகளில் தோன்றியதற்குச் சான்றாக, தை மாதத்தில் காணும் பொங்கலைத் தொடர்ந்து, ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு திருக்கோவிலூர், மணலூர்பேட்டையில் வரும் 19-ஆம் தேதி ஆற்றுத் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றுத் தீர்த்தவாரியில் கீழையூர் ஸ்ரீவீரட்டானேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளும், மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றுத் தீர்த்தவாரியில் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளும் எழுந்தருள்கின்றனர். தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், தற்போது தென்பெண்ணையாறு முற்றிலும் வறண்டு பாலைவனமாய் காட்சியளிக்கிறது. இதனால், ஆற்றுத் திருவிழாவுக்கு எழுந்தருளும் உத்ஸவ மூர்த்திகளின் தீர்த்தவாரிக்கு தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. எனவே, தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து ஏற்பட்டால், திருவிழா சிறப்பாக நடைபெற ஏதுவாக இருக்கும் என்பதால், சாத்தனூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். நெகிழி ஒழிப்பு நடவடிக்கை நடைமுறையில் உள்ள நிலையில், ஆற்றுத் திருவிழாவில் தண்ணீர் பாக்கெட் விற்பனை செய்ய முடியாது.
எனவே, லாரிகள் மூலமோ, தென்பெண்ணையாற்றில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் வாயிலாகவோ திருவிழாவுக்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com