ஆரோவிலில் மஞ்சுவிரட்டு 

காணும் பொங்கலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், ஆரோவில், குயிலாப்பாளையத்தில்

காணும் பொங்கலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், ஆரோவில், குயிலாப்பாளையத்தில் வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதை வெளிநாட்டினர் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
ஆரோவில் அருகேயுள்ள குயிலாப்பாளையத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி மஞ்சு விரட்டு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு வியாழக்கிழமை காலை குயிலாப்பாளையத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. ஊர் எல்லையில் உள்ள எல்லை பிடாரி அம்மன் கோயில் அருகேயுள்ள மந்தை வெளித் திடலுக்கு, கோயிலிருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மன் சிலையைக் கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர், மகா தீபாராதனை காட்டினர். இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஊர் எல்லையிலிருந்து காத்தவராயன் சுவாமி, பரிவார மூர்த்திகளுடன் ஊர்வலமாக மந்தைவெளித் திடலுக்கு வந்தார்.
பின்னர், கொம்புகளில் வர்ணம் பூசி, பூ, பலூன்களை கட்டி அலங்கரிக்கப்பட்ட மாடுகளை மந்தைவெளித் திடலுக்கு  மக்கள் அழைத்து வந்தனர். அந்த மாடுகளின் கழுத்தில் எலுமிச்சைப் பழங்களும், வாழைப் பழங்களும் கட்டிவிடப்பட்டிருந்தன. இதையடுத்து அம்மன் முன் நிறுத்தப்பட்டு மாடுகளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.  
பின்னர், மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பழங்களை கோயில் நிர்வாகிகள் சூறை விட்டனர்.  அந்த பழங்களை மக்கள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்துச் சென்றனர். இந்தப் பழங்களை அம்மன்  வீசுவதாகவும், இதனை வீட்டுக்கு எடுத்துச் சென்றால் நல்லது நடக்கும் என்பதும் அந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.
இதைத் தொடர்ந்து மந்தைவெளித் திடலில் இருந்து மஞ்சு விரட்டு நடைபெற்றது. 
இதில், சிறுவர்களும், இளைஞர்களும் பங்கேற்று மாடுகளை வீதிகள் வழியாக விரட்டிச் சென்றனர். இதற்காக, சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டன.
இந்த மஞ்சுவிட்டைக் காண ஆரோவில், குயிலாப்பாளையம் மட்டுமின்றி, புதுச்சேரியிலிருந்தும் பொதுமக்கள், சுற்றுலாப் பணிகள் வந்திருந்தனர். மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் குயிலாப்பாளையம் கிராமத்தில் குவிந்திருந்தனர். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியையொட்டி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com