3,379 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: எம்.பி. வழங்கினார்
By DIN | Published On : 24th January 2019 09:36 AM | Last Updated : 24th January 2019 09:36 AM | அ+அ அ- |

செஞ்சியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் 3,379 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை ஆரணி எம்.பி. வெ.ஏழுமலை வழங்கினார்.
செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செஞ்சி கூட்டுறவு வங்கித் தலைவர் வி.ரங்கநாதன் தலைமை வகித்தார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் கோ.கணபதி வரவேற்றார். செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் கா.ரோஸ் நிர்மலா முன்னிலை வகித்தார். செஞ்சி அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிகள், நல்லாண்பிள்ளைபெற்றாள், சத்தியமங்கலம், ஆலம்பூண்டி, மழவந்தாங்கல், அனந்தபுரம், தையூர், கவரை, செஞ்சி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளி, லூர்து அன்னை மிக்கேல் மேல்நிலைப் பள்ளி கணக்கன்குப்பம், அணிலாடி தூய இருதய மேல்நிலைப் பள்ளி ஆகிய 11 பள்ளிகளைச் சேர்ந்த 1,596 மாணவர்களும், 1,783 மாணவிகளுக்கும் ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினர் வெ.ஏழுமலை விலையில்லா மதிவண்டிகளை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய அதிமுக செயலர் அ.கோவிந்தசாமி, மாவட்ட முன்னாள் கவுன்சிலர் ஜெகதீசன், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ஆத்மலிங்கம், காதர், ஆர்.சங்கர், டி.செல்வராஜ், நல்லாண்பிள்ளைபெற்றாள் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.