ஏடிஎம் மையத்தில் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவர்
By DIN | Published On : 05th July 2019 08:46 AM | Last Updated : 05th July 2019 08:46 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள ஏடிஎம் மைய இயந்திரத்தில் வேறொரு வாடிக்கையாளரின் பணம் ரூ.10 ஆயிரம் வந்ததையடுத்து, அந்தப் பணத்தை முதியவர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்தில் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பணம் எடுக்கச் சென்றார். பணஅட்டையின் மூலம் இயந்திரத்தில் பணத்தை எடுக்க முயன்ற அவர், பணம் வர தாமதமானதையடுத்து, பணம் வராது என்று சென்று விட்டார். அதே ஏடிஎம் மையத்தில் செஞ்சி வட்டம், பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (61) பணம் எடுக்கச் சென்றார். அப்போது, அவரது பண அட்டையை இயந்திரத்தில் செலுத்தியவுடன் ரூ.10 ஆயிரம் வந்தது.
அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு செஞ்சி காவல் நிலையத்துக்கு எழுமலை சென்றார. அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷிடம் விவரத்தைக் கூறி பணத்தை ஒப்படைத்தார். நேர்மையாக செயல்பட்ட ஏழுமலையை காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.