தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 05th July 2019 08:43 AM | Last Updated : 05th July 2019 08:43 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே பணி நேரத்தில் சொந்த வேலைக்காக வெளியே சென்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சின்னசேலம் அருகேயுள்ள பங்காரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம் புதன்கிழமை பள்ளி வேலை நேரத்தின்போது, பணியில் இல்லாமல் வெளியே சென்றதாகத் தெரிகிறது.
இதனிடையே, கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அலுவலர் கார்த்திகா புதன்கிழமை திடீரென அந்தப் பள்ளிக்கு ஆய்வுக்காகச் சென்றார்.
அப்போது, பள்ளியில் இல்லாத தலைமை ஆசிரியர் சண்முகம், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு வெளியில் சென்றிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் மாவட்டக் கல்வி அலுவலர் விசாரித்தபோது, பணி நேரத்தில் தலைமை ஆசிரியர் சொந்த வேலைக்காக வெளியே சென்றிருந்ததை உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து, தலைமை ஆசிரியர் சண்முகத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டார்.