காரில் மது கடத்தல்: இளைஞர் கைது
By DIN | Published On : 08th July 2019 09:19 AM | Last Updated : 08th July 2019 09:19 AM | அ+அ அ- |

புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை கடத்திய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மதுப்புட்டிகள் கடத்திச் செல்லப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, எல்லையில் 9 இடங்களில் மது விலக்கு சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வளவனூர் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விநாயக மூர்த்தி தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 27 புதுச்சேரி மதுப் புட்டிகள் இருந்தன. இது தொடர்பாக, காரில் இருந்தவரிடம் விசாரித்ததில், அவர் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே குடிச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஷாகுல் அமீது மகன் அபுதாகீர்(21) என்பதும், புதுச்சேரியிலிருந்து தஞ்சாவூருக்கு மதுப் புட்டிகளை கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, மதுப் புட்டிகள் மற்றும் காரை பறிமுதல் செய்து, விழுப்புரம் மது விலக்கு போலீஸில் ஒப்படைத்தனர். அபுதாகீரை மது விலக்கு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.