மோட்டார் சைக்கிள்கள் தொடர் திருட்டு: 3 இளைஞர்கள் கைது
By DIN | Published On : 13th July 2019 10:21 AM | Last Updated : 13th July 2019 10:21 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டதாக 3 இளைஞர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடுபோயின. இந்த நிலையில், சின்னசேலம் காவல் ஆய்வாளர் கே.சுதாகர், காவல் உதவி ஆய்வாளர் கோ.ராஜேந்திரன்
மற்றும் போலீஸார் கூகையூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள குறுக்குச் சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ரோந்து சென்றனர்.
அப்போது, ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறியதால், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை
மேற்கொண்டனர்.
இதில், அவர்கள் சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான் மகன் விக்னேஷ் (22), அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் நந்தகுமார் (19), பெரம்பலூர்
மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தெண்டையான்துறையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேசன் (எ) வெங்கடாசலம் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் கள்ளக்குறிச்சி, சின்னசேலம்
பகுதிகளில் 6 மோட்டார் சைக்கிள்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த மோட்டார் சைக்கிள்களை கைபற்றிய போலீஸார், மூவரையும் கைது செய்தனர்.