அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை: 7 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 7 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு ஊராட்சி, அனிச்சங்குப்பம் நம்பிக்கைநல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வினோத்ராஜ் (28).  அதிமுக பிரமுகர். அதே பகுதியைச் சேர்ந்த ஞானமணி மகன் முகேஷ் (24). மீனவ குப்பத்தைச் சேர்ந்த இருவரும், வியாழக்கிழமை இரவு கோட்டக்குப்பத்தில் இருந்து, கிழக்கு கடற்கரைச் சாலையில்  மோட்டார் சைக்கிளில், கீழ்புத்துப்பட்டு சோதனைச் சாவடி அருகே சென்ற போது, ஒரு கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.
இவர்களது சப்தம் கேட்டு ஓடிவந்த அந்தப் பகுதி மக்கள் இருவரையும் மீட்டு புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே வினோத்ராஜ் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முகேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், வினோத்ராஜின் உறவினர்கள், கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த  கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய்தங்கம், காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரிய வந்தது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
அனிச்சம்பாளையத்தைச் சேர்ந்த முகேஷ் தரப்புக்கும், கீழ்புத்துப்பட்டைச் சேர்ந்த ஜனா என்கிற விமல்ராஜ் தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்தாண்டு, ஜனாவின் பிறந்த நாள் விழாவின் போது, வாழ்த்துப் பதாகையை முகேஷின் ஆதரவாளரான அபீஸ் கிழித்ததையடுத்து, மோதல் ஏற்பட்டது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை தனிமையில் வந்த அபீஸை, ஜனா தரப்பினர் தாக்கினர். இதையறிந்த முகேஷ், வினோத்ராஜ் ஆகியோர் சம்பவ    இடத்துக்கு வந்து தட்டிக் கேட்ட போது, மது போதையில் இருந்த இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஜனா தரப்பினர், இருவரையும்  வெட்டினராம். இதில், கீழே விழுந்த வினோத்ராஜின் மீது கல்லை தூக்கிப் போட்டு விட்டு அந்த கும்பல் சென்றதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.  வினோத்ராஜுக்கு ஜீவிதா என்ற மனைவியும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். முகேஷ் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜனா என்கிற விமல்ராஜ், சின்னக்காலாப்பட்டைச் சேர்ந்த நாராயணன் மகன் கௌதம் (24), கலைஞர், கீழ்புத்துப்பட்டைச் சேர்ந்த பெருமாள் மகன் பரத், மனோராஜ், கூனிமேடுக்குப்பத்தைச் சேர்ந்த கொக்கி மகன் சரண், கதிரவன் ஆகியோரை கோட்டக்குப்பம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com