கல்வராயன்மலை கோடை விழாவில் 1,897 பேருக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர்

விழுப்புரம் மாவட்டம், கல்வராயன்மலையில் சனிக்கிழமை நடைபெற்ற கோடை விழாவில், 1,897 பேருக்கு ரூ.ஒரு கோடியே 7 லட்சத்து 867 மதிப்பிலான


விழுப்புரம் மாவட்டம், கல்வராயன்மலையில் சனிக்கிழமை நடைபெற்ற கோடை விழாவில், 1,897 பேருக்கு ரூ.ஒரு கோடியே 7 லட்சத்து 867 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சர்கள் வெல்லமண்டி ந.நடராஜன், திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.
கல்வராயன்மலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் இணைந்து 2 நாள்கள் நடத்தும் கோடை விழா சனிக்கிழமை தொடங்கியது. வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் விழாவைத் தொடக்கிவைத்தார். 
பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகளை சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் தொடக்கிவைத்தார். பின்னர், அமைச்சர்கள், 
எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர்  அரங்குகளை பார்வையிட்டனர்.
விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் பேசியதாவது: கல்வராயன்மலை கோடை விழாவில் அரசின் பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மலைவாழ் மக்களுக்கு மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
கல்வராயன்மலைப் பகுதியில் ரூ.60 லட்சத்தில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோமுகி அணை 
மற்றும் கல்வராயன்மலைப் பகுதியில் ரூ.39 லட்சத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
கல்வராயன்மலைப் பகுதியில் மேகம், சிறுகலூர், எட்டியூர் அருவிகள் உள்ளன. எட்டியூர் அருவி சங்கராபுரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. அதில், 750 மீட்டர்தான் வனத் துறைக்கு சொந்தமான இடம். இங்கு சாலை அமைக்க வனத் துறை அமைச்சரிடம் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல, சிறுகலூர், மேகம் அருவிகளுக்குச் செல்லவும் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு சில கி.மீ. தொலைவுக்கு மட்டுமே சாலைப் பணிகள் எஞ்சியுள்ளன என்றார் அவர்.
விழாவில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:  மலைவாழ் மக்கள் நிறைந்த கல்வராயன்மலைப் பகுதியை முன்னேற்றுவதற்கு தமிழக அரசு முழுக் கவனம் செலுத்தியுள்ளது. மலைவாழ் மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.69.70 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
கல்வராயன் மலை மக்களுக்கு அரசு சார்பில் குடியுரிமை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு கிராம வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டு, ரூ.4.08 கோடி அளவில் அவர்களுக்கு தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில், கிராம வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.14 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது.
இங்குள்ள படித்த இளைஞர்களுக்கு கோவையில் வேலைவாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, சீருடை, காலணிகள் வழங்கப்பட்டுள்ளன. இங்குள்ள மக்களில் 688 பேருக்கு தனி நபர் 
உரிமைப் பட்டாக்களும், 89 சமுதாய உரிமை பட்டாக்களும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளன.
வனத் துறையின் அனுமதி பெற்று, சாலைகள் பழுது நீக்கப்பட்டு, 20 சாலைகள் வரை போடப்பட்டுள்ளன. எம்எல்ஏ உதயசூரியன் புகார் கூறிய, வெள்ளிமலை - சின்னதிருப்பதி சாலைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அனைத்து சட்டப் 
பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பணிகளும் மத்திய, மாநில அரசு நிதியின் மூலம்  மாவட்ட ஆட்சியர் வாயிலாக செய்யப்பட்டு வருகிறது. கல்வராயன்மலைப் பகுதியில் சமுதாய உரிமைகள் மூலம் 1,000 பழங்குடியின மக்களுக்கு தனி உரிமைகள் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
வெளிநடப்பு செய்த திமுக
வினர் : முன்னதாக, விழாவில் பங்கேற்று, சங்கராபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ தா.உதயசூரியன் பேசியதாவது: கல்வராயன்மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக சாலைகள் போடப்படாமல் உள்ளன. இந்தப் பகுதியில் 3 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. 
அதற்கு, சாலை வசதியை ஏற்படுத்தித் தரவில்லை. நிலத்தை சீர்படுத்தும் மக்கள் மீது வனத் துறையினர் வழக்குப் பதிவு செய்வதை தடுக்க வேண்டும். கடந்த கோடை விழாவில் சொன்னதைக்கூட நிறைவேற்றவில்லை என்று குறைகளை தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த சுற்றுலாத் துறை அமைச்சர், இந்தக் குறைகள் குறித்து எம்எல்ஏ உதயசூரியன் ஒருமுறை கூட என்னிடம் பேசியதில்லை. மக்களிடம் நல்ல பெயர் வாங்க விழாவில் மட்டும் பேசுவதில் அவர் வல்லவர் என்றார்.  
தொடர்ந்து, வனத் துறை அமைச்சர் பதிலளிக்கையில், வனத் துறை அனுமதியோடு இங்கு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்வராயன்மலையில் விதிகளை மீறுவோருக்கு அறிவுரை வழங்க வேண்டுமே தவிர, தவறுகளை ஊக்கப்படுத்தக் கூடாதென எம்எல்ஏ உதயசூரியனுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனால், கோபமடைந்த எம்எல்ஏ உதயசூரியன், எம்.பி. பொன்.கௌதமசிகாமணி ஆகியோர் விழாவிலிருந்து திடீரென வெளியேறினர்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பேசுகையில், கல்வராயன்மலைப் பகுதியைச் சேர்ந்த 15 ஊராட்சிகளிலும் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார் அவர்.
விழாவில், எம்எல்ஏ இரா.
குமரகுரு, மண்டல வன அலுவலர் ரானேஷ்குமார் ஜகினியா, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன், கள்ளக்குறிச்சி சார் - ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, சுற்றுலா அலுவலர் சின்னசாமி, முன்னாள் எம்.பி. காமராஜ், சர்க்கரைஆலை இணயத் தலைவர் ஏ.எஸ்.ஏ.
ராஜசேகர் மற்றும் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com