விழுப்புரம் மாவட்டத்தில்  பலத்த மழை: பள்ளிச் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர்


விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. நெடுஞ்சாலையோரம் மரம் விழுந்ததாலும், பள்ளிச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாலும் பாதிப்புகள் ஏற்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் கோடையைக் கடந்தும் தொடர்ச்சியாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
விழுப்புரம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணிக்குத் தொடங்கிய மழை தொடர்ச்சியாக 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால், இந்திரா நகர் தரைப்பாலம், நேருஜி சாலை விரிவாக்கத்துக்கான பள்ளம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர் மழையால், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதேபோல, திண்டிவனம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து, அதிகாலை வரை மழை விட்டு விட்டு பெய்ததால், சாலையில் மழை நீர் வழிந்தோடியது.
பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது: 
திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் தொடர்ந்து 3 நாள்களாக பெய்த மழை காரணமாக, அருகே உள்ள சரவணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுற்றுச்சுவர் சனிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
வேன் மீது விழுந்த புளிய மரம்: இதேபோல, சென்னை - திருச்சி நான்கு வழிச் சாலையில், அரசூர் அருகே மாமந்தூரில் நெடுஞ்சாலையோரம் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற சொகுசு வேன் மீது மரம் விழுந்ததால் வேன் சேதமடைந்தது. அந்த வேனில் ஆளில்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவெண்ணெய்நல்லூர் அருகே அரும்பட்டு, மாமந்தூர் உள்ளிட்ட இடங்களில் மின் கம்பங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. டி.எடையார் அருகே புளியமரக்கிளை பேருந்து மீது விழுந்தது. திடீர் மழையால் வறட்சியின் பாதிப்பிலிருந்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருக்கோவிலூர், செஞ்சியில் 105 மி.மீ. மழை: விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை வரை பதிவான மழையளவு விவரம்:
விழுப்புரம் 68 மி.மீ., விக்கிரவாண்டி 16 மி.மீ., வானூர் 41 மி.மீ., திண்டிவனம் 51 மி.மீ., செஞ்சி 105 மி.மீ., மேல்மலையனூர் 18 மி.மீ., திருக்கோவிலூர் 105 மி.மீ.,  திருவெண்ணெய்நல்லூர் 27 மி.மீ., கள்ளக்குறிச்சி 18.4 மி.மீ., சங்கராபுரம் 51 மி.மீ., சின்னசேலம் 23 மி.மீ. அளவும் மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 34 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com