Enable Javscript for better performance
குடிநீர்த் தேக்கத் தொட்டிகள் இருந்தும் நீரின்றி தவிக்கும் கிராம மக்கள்!- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர்த் தேக்கத் தொட்டிகள் இருந்தும் நீரின்றி தவிக்கும் கிராம மக்கள்!

    By DIN  |   Published on : 25th July 2019 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் அருகே கண்டமானடி ஊராட்சியில் இரு  மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டிகள் இருந்தும் ஆழ்துளைக் கிணறுகள் சீரமைக்கப்படாததால், குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
    விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இரு ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால், கடந்த சில மாதங்களாகத் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
    இதுகுறித்து,  அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: இரண்டு குடிநீர் மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டிகள் இருந்தும்,  தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் சிறிது நேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது. அதுவும் அனைத்து வீதிகளுக்கும் வருவதில்லை. தாழ்வான பகுதிக்கு மட்டும் செல்வதால், மேடான பகுதியில் உள்ளவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.
    வறட்சியால் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லை. 
    இங்குள்ள முதன்மைச் சாலையில் உள்ள ஆழ்துளைக் கிணறு தூர்ந்து 50 அடி ஆழம் மட்டுமே உள்ளதால், தண்ணீர் பிரச்னை உள்ளது. இரண்டு ஆழ்துளைக் கிணறுகளும் அங்கிருந்த அடிபம்புக்காக குறைந்த ஆழத்தில் அமைக்கப்பட்டதாகும். இதை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருவதால்,  தண்ணீர் இறைப்பதில்லை. 
    நிரந்தர மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் இல்லாததால்,  குடிநீர் தேக்கத் தொட்டியைச் சுத்தப்படுத்தாமல், அங்கிருந்து விநியோகிக்கப்படும் நீர் பாசி படிந்து மோசமாக உள்ளது.
    புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டும் என்று கடந்த ஓராண்டாக கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, குடிநீருக்காக இந்தப் பகுதி மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும் என்றனர் அவர்கள்.
    இதேபோல்,  இருளர் குடியிருப்புப் பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இது கட்டப்பட்ட சில மாதங்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாம். அதன் பிறகு,  ஆழ்துளைக் கிணறு பழுதானதால் செயல்பாடின்றிக் கிடக்கிறதாம். இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த இருளர் குடியிருப்பு வாசிகள் கைப்பம்பில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
    இதேபோல,  காலனி பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, கடந்த 2012-13 ஆம் ஆண்டில் சீரமைத்து குடிநீர் ஏற்றி வருகின்றனர். இதனால், அது இடிந்து விழும் நிலையில் உள்ளது.
    இங்குள்ள 2 சிறு மின்விசை குடிநீர் தொட்டிகளும் பராமரிக்காமல் விட்டதால்,  குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. காலையில் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. சிறு மின்விசை பம்பைச் சீரமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என்றனர் அந்தப் பகுதி மக்கள்.
    இதுகுறித்து, ஊராட்சி செயலர் ராஜா கூறியதாவது:
    ஆழ்துளைக் கிணறுகளில் ஏற்பட்ட வறட்சியால் தண்ணீர் குறைந்துள்ளது.  அதன் மூலம்தான் தண்ணீர் ஏற்றி, விநியோகித்து வருகிறோம்.  புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்க வட்டார வளர்ச்சித் துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 
    காலனி பகுதி குடிநீர்த் தொட்டி சீரமைக்கப்பட்டு, தரமாகவே இயங்குகிறது. அங்குள்ள சிறு மின்விசை பம்புகள் மட்டும் சீரமைக்க வேண்டியுள்ளது. இருளர் குடியிருப்புப் பகுதி ஆழ்துளைக் கிணறும் சீரமைக்க வேண்டியுள்ளது. விரைவில் சீரமைக்கப்பட்டு, சீரான முறையில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai