Enable Javscript for better performance
தனி அதிகாரி தலைமையில் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை ஏற்படுத்தும் பணிகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    தனி அதிகாரி தலைமையில் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை ஏற்படுத்தும் பணிகள் தீவிரம்

    By இல.அன்பரசு  |   Published on : 25th July 2019 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை அமைப்பதற்காக தனி ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதால்,  அரசு சார்பில் தனி மாவட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
    தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டமாக (7,217 சதுர கி.மீ, சுமார் 40 லட்சம் மக்கள் தொகை) உள்ள விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமை இடமாகக்கொண்டு தனி மாவட்டத்தை அமைக்க வேண்டும் என்று, கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கைகள் தொடர்ந்து வந்தன. கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
    இதை நிறைவேற்றும் விதமாக, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கடந்த ஜனவரி 8-ஆம் தேதி நடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில், கள்ளக்குறிச்சியை தலைமை இடமாகக் கொண்டு, தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
    அதே வேகத்தில், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தலைமையில்,  விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிப்பது தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில், தனி மாவட்டத்துக்கான பகுதிகள் பிரிப்பதில் பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.
    தனி அதிகாரி நியமனம்: இதையடுத்து, தமிழகத்தின் 33-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாகப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதத்தில், தனி அதிகாரியாக சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணைச் செயலராக இருந்த கிரண் குராலாவை தமிழக அரசு நியமித்தது.
    இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
    அரசாணைப்படி, தனி அதிகாரியின்கீழ், செயல்படுவதற்காக தனி வட்டாட்சியர் உள்ளிட்ட குழுவினரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
    அந்த வகையில், கள்ளக்குறிச்சி ரயில்வே நிலம் கையகப்பிரிவு தனி வட்டாட்சியர் எஸ்.சையத்காதர், களையநல்லூர் வடிப்பக அலுவலக துணை வட்டாட்சியர் பி.வித்யாதரன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ருத்ரகுமார், இளநிலை வருவாய் ஆய்வாளர் டி.அனுசுயா மற்றும் உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    கள்ளக்குறிச்சியில் புதிய இடம் தேர்வு: புதிய மாவட்டம் பிரிப்பதற்கான தனி அலுவலர் அலுவலகம் செயல்படுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக, கள்ளக்குறிச்சி புதிய நகராட்சி அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், ஏதேனும் ஒரு இடத்தில் தனி அலுவலர் அலுவலகம் ஓரிரு நாளில் தொடங்கப்படவுள்ளது.
    தனி அலுவலர் கிரண் குராலா வியாழக்கிழமை (ஜூலை 25) கள்ளக்குறிச்சிக்கு வந்து பணியைத் தொடங்குவார் எனத் தெரிகிறது. முதல்கட்டமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட புதிய மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் அமையும் இடத்தை தேர்வு செய்தல், வருவாய்த் துறை, கல்வித் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை உள்ளிட்ட 54 துறைகளை நிர்வாக ரீதியில் பிரிப்பது, அவர்களுக்கான அலுவலகங்களை அமைப்பது, இந்தத் துறைகளில் பணிபுரிவதற்கான அலுவலர்கள், ஊழியர்களை பிரிப்பது குறித்து ஆய்வு செய்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
    தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பகுதிகள் பிரிக்கப்படும். 
    விழுப்புரத்தில் உள்ள 13 வட்டங்களில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் வட்டங்கள், கள்ளக்குறிச்சி நகராட்சி உள்ளிட்டப் பகுதிகள் கள்ளக்குறிச்சியில் இடம் பெறும்.
    அருகே உள்ள உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் வட்டங்களின் பகுதிகளும் இடம்பெற வாய்ப்புள்ளன. இதுகுறித்த பணிகளை தனி அதிகாரி தலைமையிலான  குழுவினர் மேற்கொள்வார்கள்.
    இது தொடர்பாக, ஏற்கெனவே கருத்துக் கேட்கப்பட்டுள்ளதால், அதனையும் ஆய்வு செய்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து, தனி மாவட்டம் அமைப்பதற்கான பணிகளை இந்தக் குழுவினர் மேற்கொள்வார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஒருங்கிணைந்த தென்னாற்காடு (கடலூர்) மாவட்டத்திலிருந்து கடந்த 1993 செப்டம்பர் 30-இல் விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai