Enable Javscript for better performance
நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைபட்டியலை அளிக்க அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை பட்டியலை அளிக்க அறிவுரை

    By DIN  |   Published on : 25th July 2019 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டத்தில் 2018 - 19ஆம் கல்வியாண்டுக்கான நல்லாசிரியர் விருது பெறுவதற்கான தகுதியான ஆசிரியர்கள் பட்டியலை மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டுமென கல்வித் துறை தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 2018 - 19ஆம் கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு அரசு சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்காக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து, முழுமையான கருத்துருக்களை அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது.
    உயர்நிலை, மேல்நிலை, தொடக்க நிலை பள்ளிகளில் கல்வி மாவட்டத்துக்கு தலா 2 ஆசிரியர்கள் வீதமும், மேலும் சுயநிதி, மெட்ரிக் பள்ளிகளில் தலா ஒரு ஆசிரியர் வீதமும் தேர்வு செய்து, நல்லாசிரியர்களுக்கான கருத்துருக்களை புத்தக வடிவில், இரு நகலை மட்டும் ஜூலை 29-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
    விருது பெறும் ஆசிரியர்களுக்கான நடைமுறைகள்: தலைமை ஆசிரியர்கள் எனில் 20 ஆண்டுகளும், ஆசிரியர்கள் எனில் 15 ஆண்டுகளும் பணியாற்றியிருக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களை பரிந்துரைக்கக் கூடாது. தேர்ச்சி சதவீதம் உயர்த்தல், மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்றியவர்களாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளில் பங்கேற்றவர்கள், அவர்களுடன் தொடர்புள்ள ஆசிரியர்களை பரிந்துரைக்கக் கூடாது. கல்வியை வணிக ரீதியாக கருதாதவர்களாக இருக்க வேண்டும்.
    இந்த விதிமுறைகளைப் பின்பற்றி தகுதியுடையவர்களின் பட்டியலை பரிந்துரைத்து, முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று,  மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai