முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
ஆட்டோ - பைக் மோதல்: ஒருவர் சாவு: 6 பேர் பலத்த காயம்
By DIN | Published On : 30th July 2019 10:07 AM | Last Updated : 30th July 2019 10:07 AM | அ+அ அ- |

செஞ்சி அருகே ஆட்டோவும், பைக்கும் திங்கள் கிழமை நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆட்டோ ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோ, பைக்கில் பயணம் செய்த 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
மேல்மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு மகன் முன்னாபேக் (35). இவர், ஆட்டோ ஓட்டி வந்தார். ஆட்டோவில் திங்கள்
கிழமை செஞ்சி அருகே தனியார் கல்லூரியில் படித்து வரும் மேல்மலையனூரைச் சேர்ந்த சேட்டு மகன் தமிழ்ச்செல்வன் (19), ஆறுமுகம் மகன் சுரேஷ் (19), காசி மகன் சதீஷ் (19), முருகன் மகன் ஜீவா (19) ஆகியோரை ஏற்றிக்கொண்டு செஞ்சி நோக்கி முன்னாபேக் சென்றுகொண்டிருந்தார்.
கன்னலம் கிராமத்தில் உள்ள வீரன் சிலை அருகே சென்றபோது, எதிரே வந்த பைக், ஆட்டோ மீது அதிவேகமாக மோதியதாகத் தெரிகிறது. இதில், ஆட்டோ ஓட்டுநர் முன்னாபேக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வன், சுரேஷ், சதீஷ், ஜீவா மற்றும் பைக்கில் வந்த ஞானோதயம் கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் மகன் மல்லியப்பன் (40), முருகேசன் மகன் குமார் (40) ஆகியோர் மீட்கப்பட்டு, செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், சுரேஷ் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும், மற்றவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வளத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.