முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவர் கழுத்தறுத்துக் கொலை
By DIN | Published On : 30th July 2019 07:20 AM | Last Updated : 30th July 2019 07:20 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே காப்புக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு பள்ளி மாணவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். அவர் நரபலி கொடுக்கப்பட்டாரா? என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எலவனாசூர்கோட்டையை அடுத்த அயன்குஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (45). இவர், சவூதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆதிபராசக்தி (40). இவர், தனது மகள் சௌந்தர்யா, மகன்கள் சரத்குமார், சிவக்குமார் (15) ஆகியோருடன் கிராமத்தில் வசித்து வந்தார். சிவக்குமார் எலவனாசூர்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றனர்.
அப்போது, அதே பகுதியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள காப்புக்காட்டில் பாறைகளுக்கு இடையே சிவக்குமார் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரவணக்குமார், உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ஏழிலரசி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். பின்னர், சிவக்குமாரின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக எலவனாசூர்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் சிவக்குமார் கழுத்தறுக்கப்பட்டு சடலமாகக் கிடந்ததால், அவர் நரபலி கொடுக்கப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து அவரின் தாய், உறவினர்கள் மற்றும் அந்த ஊரில் சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த முதியவர் உள்பட 10 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், கொலை நடைபெற்ற பகுதியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் திங்கள்கிழமை பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.