முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
குடிநீர் பிரச்னை: வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 30th July 2019 10:10 AM | Last Updated : 30th July 2019 10:10 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே சிறுநாகலூர் கிராமத்தில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிறுநாகலூர் கிராமத்தில் மேற்குசாலைப் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதி மக்களுக்கு அய்யனார் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆழ்துளைக் கிணற்றில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீர்மட்டம் குறைந்ததால், மேற்குசாலைப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் அந்தப் பகுதி மக்கள் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், சிறுநாகலூர் மேற்குசாலைப் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அங்குள்ள கிராம சேவை மையம் அருகே புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது.
எனினும், அதிலிருந்து குடிநீர் குழாய் இணைப்பு முறையாக செய்துகொடுக்கப்படாததால், தொடர்ந்து மேற்குசாலைப் பகுதியில் குடிநீர் பிரச்னை நீடித்து வருகிறதாம். இதனால் அதிருப்தியடைந்த அந்தப் பகுதி மக்கள், தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, சிறுநாகலூர் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குடிநீர் குழாய்களை விரைந்து அமைத்து ஓரிரு நாள்களில் மேற்குசாலைப் பகுதிக்கும், காலனி பகுதிக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.